பல்கலை., பாட்மின்டன் வீராங்கனை குமுறல் * நிர்வாக குளறுபடியால் ஏற்பட்ட சோகம்

புதுடில்லி: நிர்வாகத்தினர் செய்த குளறுபடியால் இந்திய பாட்மின்டன் வீரர், வீராங்கனைகள் என 6 பேர், பல்கலை., விளையாட்டில் பங்கேற்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.
ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. 114 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் விளையாடுகின்றனர். இதன் பாட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவில் சதிஷ்குமார், தேவிகா, தயானந்த், தஸ்னிம், வர்ஷினி, வைஷ்ணவி என 6 பேர் இடம் பெற்ற இந்திய அணி, முதன் முறையாக வெண்கலம் வென்றது.
ஆனால், பல்கலை., விளையாட்டு விதிப்படி ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 6 வீரர், 6 வீராங்கனை என மொத்தம் 12 பேர் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 12 பேர் சென்றனர். ஆனால் 6 பேர் பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட, ரோஹன் குமார், தர்ஷன், ஆதித்தி, அபினாஷ், விராஜ், அலிஷா என 6 பேர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பல்கலை., விளையாட்டு வீராங்கனை அலிஷா வெளியிட்ட செய்தி:
மனிதத் தவறுகள் மற்றவர்கள் வாழ்க்கையை வீணடித்து விடக் கூடாது. கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்க 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் தரப்பட்டன. அனைவரும் ஜெர்மனியில் விளையாட காத்திருந்தோம். ஆனால் இந்திய அணி நிர்வாகத்தினர் பெயர்களை பதிவு செய்வதில் தவறு செய்து விட்டனர்.
கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் 12 பேர் பெயர்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தரப்பில் 6 பெயர்களை தவிர மற்றவர்களை விட்டுவிட்டனர். நாங்கள் போட்டிகளில் தோற்கவில்லை. பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்டது.
தற்போது இந்தியா வெண்கலம் வென்ற நிலையில், அணியில் இடம் பெற்ற 6 பேருக்கு மட்டும், சான்றிதழ், பரிசு, அரசு வேலை, அங்கீகாரம் என அனைத்தும் கிடைக்கும். நிர்வாகத்தினரின் கவனக்குறைவு காரணமாக, நாங்கள் வெறுங்கையுடன் திரும்புகிறோம். எங்களது எதிர்கால வாழ்க்கையை அழித்து விட்டனர். தங்கள் தவறை ஒப்புக் கொள்ள மனமில்லை. வருத்தம் கூட தெரிவிக்க மறுத்துவிட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

காலிறுதியில் வைஷ்ணவி
பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-3, 6-4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் 400 மீ., தடை ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ருசித் பிரதாப்பாய் (50.58 வினாடி) 3வது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
* பெண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி சோஜன், முதல் 3 வாய்ப்பில் அதிகபட்சம் 6.20 மீ., துாரம் தாண்டி, 4வது இடத்தில் இருந்தார்.
* டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் தனீஷா, சயாலி ஜோடி 11-4, 11-7, 12-10 என சிங்கப்பூர் ஜோடியை வென்றது.
* பெண்கள் பீச் வாலிபால் 'சி' பிரிவு போட்டியில் இந்தியாவின் கனிமொழி, கவுஷிகா ஜோடி 0-2 என (10-21, 9-21) லிதுவேனியா ஜோடியிடம் தோற்றது.

Advertisement