சீரமைக்கப்பட்டுவரும் மதுரை ஸ்டேஷனில் கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு: செயின் பறிப்பு சம்பவத்திற்கு பிறகாவது ரயில்வே விழிக்குமா

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சி.சி.டி.வி., பற்றாக்குறை, டிக்கெட் பரிசோதகர்கள் இல்லாமை, நுழைவு வாயில்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஏழு நடைமேடைகளை கொண்ட இங்கு, ரூ.347.37 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது முதல் நடைமேடையில், பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், கழிப்பறை, சிற்றுண்டி ஸ்டால்கள் உள்ளன. மற்ற நடை மேடைகளில் குறைவான வசதிகளே உள்ளன.

சி.சி.டி.வி., பற்றாக்குறை குறிப்பாக, முதல் நடைமேடையில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சி.சி.டி.வி., கேமராக்கள், 2, 3ம் நடைமேடைகளில் பாதி துாரம் வரை மட்டுமே உள்ளன. 4 முதல் 7 நடைமேடைகளில் சொற்ப அளவிலேயே உள்ளன. முதல் நடைமேடையின் பயணிகள் காத்திருப்பு அறையில் திருட்டு சம் பவங்கள் அதிகரித்ததை யடுத்து போலீசார் காண் காணிப்பில் உள்ளனர்.

ஸ்டேஷனின் நுழைவு வாயில்கள் தவிர்த்து, 7வது நடைமேடையில் பெரியார் பஸ் ஸ்டான்ட் செல்லும் பாலம், மதுரா கோட்ஸ் அருகே உள்ள பாலம், பிட்லைன் வழியாக அன்னியர்கள் உள்ளே நுழைகின்றனர். மேற்கண்ட இடங்களில் சி.சி.டி.வி., இல்லாததால் சமூக விரோதிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்.

ஸ்டேஷனில் சில சமயம் ரயில் புறப்படும் நேரத்தை தவறாக அறிவிப்பதால் பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். அறிவிப்புகளை விட விளம்பரங்கள் அதிகம் ஒலிபரப்பப்படுகின்றன. விளம்பர ஸ்பான்சர்கள் மூலம் ஸ்டேஷனில் போதிய அளவில் சி.சி.டி.வி., கேமராக்கள் நிறு வ ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

கத்திமுனையில் செயின் பறிப்பு மேற்கு, கிழக்கு நுழைவு வாயில்களில் தலா 3 ஸ்கேனர்கள், முதல் பிளாட்பாரத்தின் ஐ.ஆர்.சி.டி.சி., லவுஞ்ச் அருகே 2 ஸ்கேனர்கள், ஒரு லக்கேஜ் ஸ்கேனர் உள்ளது. போலீசார் இல்லாததால் ஸ்கேனர்கள் வழியாக வருவதை பயணிகள் தவிர்க்கின்றனர். இது சமூக விரோதிகள் ஆயுதங்களை கொண்டு வருவதற்கு வழிவகுக்கிறது.

ரயிலில் பயணிகளிடம் பிஸ்கட் கொடுத்து திருடிய காலம் சென்று தற்போது கத்தி முனையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன் ஸ்டேஷனின் 3வது நடைமேடையில் இருந்து அதிகாலை 4:35 மணிக்கு புறப்பட்ட நாகர்கோவில் ரயிலில், ஜன்னல் ஓரம் படுத்திருந்த பெண்ணிடம் 6 பவுன் செயினை ஒருவர் பறித்து தப்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நுங்கம் பாக்கம் ஸ்டேஷனில் ஐ.டி., பெண் ஊழியர் கொலை செய்யப் பட்டதையடுத்து ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தும், மதுரை போன்ற பெரிய ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் நடந்த வழிப்பறி சம்பவம், பயணிகளின் பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது.

எனவே நுழைவு வாயில்கள் தவிர ஸ்டேஷனுக்குள் வந்து போகும் இடங்கள் கண்டறியப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

டிக்கெட் பரிசோதகர்கள் ஸ்டேஷனில் நடை பெறும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். டிக்கெட் வைத்துள்ள பயணிகள், பிளாட்பார்ம் டிக்கெட் பெற்றவர்களை மட்டும் ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கும் வகையில் டிக்கெட் பரிசோதகர்களை நியமித்து சோதனையிட வேண்டும். இவற்றின் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Advertisement