நுாறு நாள் திட்டத்தில் வளர்ச்சி பணி ரூ.3 கோடி வழங்காமல் இழுத்தடிப்பு ஒப்பந்ததாரர்கள் புலம்பல்

திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வளர்ச்சி பணிகள் செய்த ஒப்பந்ததாரர்கள், 10 மாதங்கள் ஆகியும், 3 கோடி ரூபாய் பில் தொகை வழங்கப்படாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், 2023 - 24 மற்றும் 2024 - 25ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நீர்வரத்து கால்வாய்களில் தண்ணீர் சேமிக்க தடுப்பணைகள் கட்டுப்பட்டுள்ளன.

மேலும், மழைநீர் சேகரிப்புக்கு குளம் வெட்டுதல், மழைநீர் கால்வாய்கள், சிமென்ட் சாலை, அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் ஊராட்சி அலுவலக கட்டடம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் என, மொத்தம் 150 பணிளுக்கு, 3 கோடி ரூபாய் மதிப்பில் 'டெண்டர்' விடப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள் பணிகளை முழுமையாக முடித்து, ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

ஆனால், பணிகள் முடித்து, 10 மாதங்களாகியும், ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்காமல் ஒன்றிய நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் வேறு பணிகள் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:

ஒன்றிய அதிகாரிகள், வளர்ச்சி பணிகளுக்கு 'ஒர்க்' ஆர்டர் கொடுத்ததும், பணிகளை துரித வேகத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாங்களும் கடன் வாங்கி பணிகளை முடித்து, 10 மாதங்களுக்கு மேலாகியும், 'பில்' தொகை வழங்கமால் இழுத்தடிக்கின்றனர்.

ஒன்றிய அதிகாரிகள், 'அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை' என கைவிரிக்கின்றனர். தற்போது, வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement