லேசான மழைக்கே சகதியாகும் சாலை சிறுகாவேரி எம்.ஜி.ஆர்., நகரில் அவதி

சிறுகாவேரிபாக்கம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில், லேசான மழைக்கே சகதியாக மாறியுள்ள தெருக்களுக்கு தார் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. மண் சாலையாக உள்ளதால், லேசான மழைக்கே சகதி சாலையாக மாறிவிடுகிறது.

இதனால், சகதியில் நடந்து செல்லும் பாத சாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும், நிலை தடுமாறி வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இரு நாட்களுக்கு முன், 10ம் வகுப்பு படிக்கும் காமேஷ் என்ற பள்ளி மாணவர், சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைந்து, கைகளில் கட்டு போட்டுள்ளார். மேலும், வாகனங்களும் அடிக்கடி பழுதடைகின்றன.

எனவே, சகதியாக உள்ள தெருக்களுக்கு தார்ச்சாலை அமைக்க, காஞ்சி புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுகாவேரிபாக்கம் எம்.ஜி.ஆர்., நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement