துாரந்த் கால்பந்து: இன்று துவக்கம்

கோல்கட்டா: இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. இதன் 134 வது சீசன், இன்று கோல்கட்டாவில் துவங்குகிறது. பரிசுத் தொகை 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ. 3 கோடி வழங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 23 வரை நடக்கும் இத்தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி லீக் முறையில் நடக்கும். கோல்கட்டா, ஷில்லாங், ஜாம்ஷெட்பூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் போட்டி நடக்க உள்ளன.
இன்று கோல்கட்டாவில் நடக்கும் முதல் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், தெற்கு யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
ஒப்பந்த சர்ச்சை காரணமாக ஐ.எஸ்.எல்., தொடர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகமதன் ஸ்போர்ட்டிங், ஜாம்ஷெட்பூர், பஞ்சாப், நடப்பு சாம்பியன் வடகிழக்கு யுனைடெட் என 6 அணிகள் மட்டும் துாரந்த் தொடரில் களமிறங்குகின்றன.
தவிர, டிரிபுவன் ஆர்மி (நேபாளம்), ஆர்ம்டு போர்சஸ் (மலேசியா) என இரு வெளிநாட்டு அணிகளும் பங்கேற்கின்றன.

17 கோப்பை
துாரந்த் தொடரில் மோகன் பகான் அணி அதிகபட்சம் 17 முறை கோப்பை வென்றது. 13 முறை பைனலில் தோற்று, 2வது இடம் பெற்றது.
* அடுத்த இரு இடத்தில் ஈஸ்ட் பெங்கால் (16 கோப்பை, 11 முறை 2வது இடம்), பார்டர் செக்யூரிட்டி அணி (7, 2) உள்ளன.

கார் பரிசு
சிறந்த கோல் கீப்பர், 'கோல்டன் பூட்', 'கோல்டன் பால்' விருது பெறும் 3 வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெறும் அணி, ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு, கோப்பை வழங்கப்பட உள்ளது.

Advertisement