தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடம்

சென்னை: இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனி நபர் வருமானம் 1.96,309 ரூபாய் ஆக உள்ளது.
லோக்சபாவில் மத்திய அரசு அளித்த புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 2014 -15 ல் தேசிய அளவில் தனி நபர் வருமானம் ரூ.72,805 ஆக இருந்தது. இது 2024- 25 ம் நிதியாண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது.( 57.5 சதவீதம் அதிகம்)
அதேநேரத்தில் தேசிய அளவில் இந்த வளர்ச்சி சரிசமாக இல்லை.
இந்த பட்டியலில் கர்நாடக மாநிலத்தின் தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது.
இதற்கு அடுத்து இடத்தில் உள்ள தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது.
ஒடிசா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானாவில் தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்த நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவானதாகவே உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு மகிழ்ச்சி
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி திமுக அரசு 2024-2025ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது
நேற்று( ஜூலை 21) லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1.14.710 ஆக உள்ளது.
தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழகம் ரூ.1.96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு முதல் தமிழகம் தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.










