கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர் நிலச்சரிவில் சிக்கி பலி

அரக்கோணம்: ஜம்மு காஷ்மீரில், வைஷ்ணவி கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை சென்ற, அரக்கோணம் பக்தர் நிலச்சரிவில் சிக்கி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த உப்பு குளம் பகுதியை சேர்ந்தவர் குப்பன், 75; தொழிலதிபர். இவரது மனைவி ராதா, 70. இவர்களுக்கு, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆன்மிக யாத்திரைக்காக குப்பன், மனைவி, நண்பர்களுடன் சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரிலுள்ள வைஷ்ணவி கோவிலுக்கு வேனில் சென்றார்.

மலை மீது ஏற, கணவன், மனைவி இருவரும் டோலியில் சென்றபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. டோலியில் இருந்து கீழே விழுந்த குப்பன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை அங்குள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த குப்பன் உடலை, விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர-, அரசு உதவி செய்ய வேண்டும் என, அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement