ஈரோடு மாவட்ட ஊரக பகுதிகளில் 3.90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

ஈரோடு, ஊரக பகுதிகளில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் இதுவரை, 3.90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துகிறது. கிராமப்பகுதி, மலைப்பகுதி உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளை கணக்கீடு செய்து, இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.


இதுபற்றி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஊரக பகுதிகளில் மொத்தம், 4.19 லட்சம் வீடுகள் உள்ளன. அவற்றில், 2020 ஏப்., 1க்கு முன், 64,400 வீடு
களுக்கு குடிநீர் இணைப்பு ஏற்கனவே இருந்தன. அதன்பின், முறைப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்புகள் பிற திட்டங்கள் மூலம், 98,172 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், கணக்கீடு செய்து கண்டறியப்பட்ட வீடுகளில், 2020 முதல் 2024ம் ஆண்டு வரை, 1.58 லட்சம் வீடு
களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2020 முதல், 2025ம் ஆண்டு வரை, 69,943 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதன்படி தற்போது வரை, 3.90 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊரக பகுதியில் இன்னும், 28,488 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024-25ம் நிதியாண்டு, 15ம் நிதிக்குழு மானியத்தில் நிர்வாக அனுமதி, 4,841 வீடுகளுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடக்கிறது. 2025-26ம் நிதியாண்டு, 15ம் நிதிக்குழு மானியத்தில், 9,495 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை நீங்கலாக, 13,250 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement