தியாகதுருகம் மலை சுற்றுலா தலமாக... அறிவிக்கப்படுமா?: வரலாற்று சின்னங்கள் சிதையும் அவலம்

தஞ்சாவூரில் இருந்து சித்துார் வரை தியாகதுருகம் வழியே அக்காலத்தில் சாலை அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இது ராஜபாட்டையாக பயன்படுத்தப்பட்டதால் மன்னர்களும், ராஜாக்களும் இவ்வழித்தடத்தில் அடிக்கடி சென்று வந்தனர். அவர்களின் பாதுகாப்பு கருதி தியாகதுருகம் மலை மீது 16ம் நுாற்றாண்டில் கற்கோட்டை கட்டப்பட்டது. இவ்வழியே செல்லும் ராஜாக்கள் தியாகதுருகம் கோட்டையில் தங்கி ஓய்வெடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக, இம்மலைக்கோட்டை முக்கிய ராணுவ தளமாக மாறியது. மலையை ஒட்டி செல்லும் சாலையை, தற்போதும் 'தஞ்சாவூரான் பாதை' என்று மக்களால் அழைக்கின்றனர்.
மலைக்கோட்டை கடந்த 1756 ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதைத் தொடர்ந்து 1760 ல் ஹைதர் அலி இக்கோட்டையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அவரிடமிருந்து 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றிய நிலையில் அதனை மீட்க ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் 1790 ல் ஆங்கிலேயருடன் போர் புரிந்து கோட்டையை தன் வசப்படுத்தினார்.
இப்போரின்போது, மலை மீது இருந்த கோட்டை கொத்தளங்கள் பெரும்பகுதி சிதைக்கப்பட்டது. இதன் பின்னரும் தியாகதுருகம் மலை முக்கிய ராணுவ தளமாக பயன்படுத்தப்பட்டது.
திப்புசுல்தான் காலத்தில் மலை மீது 3 பிரம்மாண்ட பீரங்கிகள் கொண்டு செல்லப்பட்டு எதிரிகளை தாக்க பயன்படுத்தப்பட்டது. இதனால் இன்று வரை இதற்கு திப்பு சுல்தான் கோட்டை என்று அழைக்கின்றனர்.
கடந்த 1799ம் ஆண்டு திப்பு சுல்தான் இறந்த பின்னர் 1801ம் ஆண்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் மலைக்கோட்டை கொண்டுவரப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க தியாகதுருகம் மலை மற்றும் அதில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் அவை மெல்ல அழிந்து வருகிறது.
மலை அடிவாரத்தில் உள்ள பீரங்கி முட்புதற்குள் சிக்கி உள்ளது. மலை உச்சியில் உள்ள பீரங்கி மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. மற்றொரு பீரங்கி பாறை இடுக்கில் எளிதில் செல்ல முடியாத இடத்தில் விழுந்து காணாமல் போய்விட்டது. மலை மேல் பகுதிக்கு செல்ல பாதி உயரத்திற்கு மட்டுமே படி கட்டுகள் உள்ளது.
பாதை முழுவதும் முட்செடிகள் வளர்ந்து எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. மலை உச்சியில் வெடி மருந்து கிடங்கு, கஜானா, கொட்டடி, சூரியன் பார்க்காத கிணறு, தாமரைக் குளம் ஆகியவை உள்ளன. தற்போது மலை மீது செல்லும் படி அமைந்துள்ள இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து மூடப்பட்டுள்ளது.
வரலாற்று ஆர்வலர்கள் மலை மீது சென்று பார்க்க முறையான அனுமதி பெற்று செல்ல வேண்டும். இங்குள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் எவ்வித பராமரிப்பும் இன்றி கால வெள்ளத்தில் மெல்ல சிதைந்து வருகிறது. மலை மீது செல்லும் படிகட்டுகளை செப்பனிட்டு வரலாற்று நினைவு சின்னங்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சென்று பார்வையிட, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பாறை இடுக்கில் கிடக்கும் பீரங்கியை மீட்டு பார்வைக்கு வைக்க வேண்டும்.
மலை உச்சியில் மண்ணில் புதையுண்டு கிடக்கும் பீரங்கியை எடுத்து மேடை அமைத்து பொருத்த வேண்டும். வரலாற்றில் முக்கிய ராணுவத்தளமாக விளங்கிய தியாகதுருகம் மலையை தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா