இன்னுயிர் காப்போம் திட்டம் ரூ 4.01 கோடியில் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 5,106 நபர்களுக்கு, ரூ.4.01 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக 'இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48' என்ற திட்டம், கடந்த 2021ம் ஆண்டு டிச., மாதம் துவக்கி வைக்கப்பட்டது.அதாவது, தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டினர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டினருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வரை தமிழக அரசே மேற்கொள்ளும்.

இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் 48 மணி நேரத்திற்கு மேல் சுயநினைவின்றி இருக்கும் பட்சத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இருந்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமலும், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் இல்லை என்றாலும், பாதிக்கப்பட்ட நபரை அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தால், இதுவரை 5,106 நபர்களுக்கு, சுமார் ரூ.4.01 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement