இழப்பீடு தராத நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
சென்னை,வீடு ஒப்படைப்பு தாமதமான வழக்கில், இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோயம்பேட்டில் 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில், 'மெட்ரோ சோன்' என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதில் வீடு வாங்க, புஷ்பலதா தினேஷ், ஜெபராஜன், சிதம்பர நடராஜன் சீதாராமன், விஜய் கிருஷ்ணன் ஆகியோர், பல ஆண்டுகளில் பணம் செலுத்தினர்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2019ல் கட்டுமான நிறுவனம் இவர்களுக்கு வீட்டை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து நான்கு பேரும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் தனித்தனியாக முறையிட்டனர்.
இவற்றை விசாரித்த ஆணையம், 'நான்கு பேருக்கும், செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். இழப்பீடாக தலா, ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்' என, 2022ல் உத்தரவிட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம் இதை நிறைவேற்றவில்லை.
இதனால் அவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டனர். இதை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள் எல்.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, பாதிக்கப்பட்டோருக்கு கட்டுமான நிறுவனம் இழப்பீட்டை தரவில்லை என்பது உறுதியாகிறது.
இதில் வீட்டை ஒப்படைப்பதாக உறுதி அளித்த தேதியில் இருந்து, வீடு ஒப்படைக்கப்பட்ட தேதி வரையிலான காலத்துக்கு மனுதாரர்கள் செலுத்திய தொகைக்கான வட்டியும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
அந்த கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, இத்தொகையை வசூலிக்க, சென்னை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நிறுவனத்திடம் உள்ள நிலத்தை ஆதாரமாக வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்