சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்த இலங்கை தொழிலதிபர், அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் முகமது அர்ஷத், 46; தொழிலதிபர். இவர், சென்னை புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். இவர், சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சட்ட விரோதமாக குடும்பத்தாருடன் தங்கி இருப்பதாக, ஐ.பி., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுபற்றி, தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் இரு தினங்களுக்கு முன், முகமது அர்ஷத்தை பிடித்து விசாரித்தனர். இது பற்றி கியூ பிரிவு போலீசார் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த முகமது அர்ஷத்தும், அதே நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரானும் நெருங்கிய நண்பர்கள்.
இலங்கையில் தொழில் போட்டி காரணமாக, இம்ரானுக்கும், பூங்கொடி கண்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இம்ரான் ஆதரவாளர்களை, பூங்கொடி கண்ணனின் ஆதரவாளர்கள் 2017ல் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்ரானின் நெருங்கிய நண்பர் என்பதால், பூங்கொடி கண்ணனின் ஆதரவாளர்கள் தன்னையும் சுட்டுக் கொன்று விடுவர் என்ற பயத்தில், 2019ல், இலங்கையில் இருந்து முகமது அர்ஷத் தமிழகம் வந்துள்ளார்.
அதன்பின், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் அழைத்து வந்துள்ளார். இவர்கள், சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.முகமது அர்ஷத், தன் நண்பர் சுரேஷ் என்பவர் வாயிலாக, மண்ணடியில் உள்ள அரசு இ - சேவை மையத்தில் விண்ணப்பித்து, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவற்றை பெற்றுள்ளார்.
கடந்த 2022ல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பதாக, போலியான ஆவணங்களை கொடுத்து, திருச்சி அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இணையதளம் வாயிலாக தி.மு.க., உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளார். முகமது அர்ஷத்திடம் இருந்து, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், முகமது அர்ஷத் மற்றும் அவரின் குடும்பத்தார், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது பற்றி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன், முகமது அர்ஷத் நேற்று முன்தினம் இரவு நாடு கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.











மேலும்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக தூண்கள் இடம் மாற்றம்; மேம்பாலத் துாண்களை இடிக்க உத்தரவு!
-
செஸ்: திவ்யா-ஹம்பி பலப்பரீட்சை; உலக கோப்பை பைனல் துவக்கம்
-
ஆந்திரா, தெலுங்கானாவில் கூடுதல் பாதை; தமிழகம் - டில்லி ரயில் பயண நேரம் குறையும்
-
ஞாயிற்றுக்கிழமைக்கு சிக்கன் பொட்லி
-
இனிப்பும், காரமும் கலந்த 'ஹனி கார்லிக்' சிக்கன்