வேடந்தாங்கல் உணவருந்தும் கூடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

மதுராந்தகம்,:வேடந்தாங்கல் ஊராட்சியில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட உணவருந்தும் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சி, தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சியாக, கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, 2023 - 24ல், மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப் பட்டது.

இந்த நிதியில் ஊராட்சி வளர்ச்சி பணிகளை செய்து கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கல்விச் சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் சுற்றுலா பயணியர் கொண்டு வரும் உணவுகளை, ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில், உணவு அருந்தும் கூடம் அமைக்க, ஊராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

பின், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்லும் சாலையில், கிராம நிர்வாக அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டட பணிகள் மிக துரிதமாக நடந்து முடிந்தன.

ஆனால், புதிதாக கட்டப்பட்ட உணவருந்தும் கூடம், பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உணவருந்தும் கூடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement