'டிஜிட்டல் அரெஸ்ட்' என வங்கி மேலாளரிடம் ரூ.75 லட்சம் சுருட்ட உதவிய வாலிபர் கைது

ஆவடி:ஓய்வு பெற்ற வங்கி மேலாளரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்த மோசடி நபருக்கு, வங்கி கணக்கு கொடுத்து உதவிய கேரள நபரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்துார், ராம் நகரைச் சேர்ந்தவர் ரவி, 62; ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர். இவர், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு நவ., 4ல், சி.பி.ஐ., அதிகாரி போல், உடை அணிந்த மர்ம நபர் ஒருவர், 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பில், ரவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, போதைப்பொருள் கடத்தலுக்கு, உங்கள் ஆதார் எண் முறைகேடாக பயன்படுத்தப் பட்டு உள்ளது எனக்கூறி, 'வாட்ஸாப்' வாயிலாக, வீடியோ அழைப்பில் அவரை, 48 மணி நேரம், 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து மிரட்டியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காமல் இருக்க, நாங்கள் கூறும் வங்கி கணக்கில், பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே, மனைவியை பிரிந்து தனிமையில், மன உளைச்சலில் இருந்த ரவி, அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ஒன்பது தவணைகளாக, 75.50 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவி, ஜன., 5ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அஜ்னாஸ், 27, என்பவரை கைது செய்தனர்.

இவர், தன் வங்கி கணக்கை மோசடி நபருக்கு கொடுத்து, 10,000 ரூபாய் கமிஷன் பெற்றதும், அவரது வங்கி கணக்கில் இருந்து பல மோசடி நபர்களுக்கு பணபரிவர்த்தனை நடந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement