பி.பி.எல்., கிரிக்கெட் பிளே ஆப் சுற்றில் மோகித் கிங்ஸ் அணி முதலிடம்

வில்லியனுார்: பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

ஸ்ரீராம் கேப்பிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக் இரண்டாவது சீசன் துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.

30வது லீக் போட்டி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த வில்லியனூர் மோகித் கிங்ஸ் அணியும், கடைசி இடத்தில் இருந்த காரைக்கால் நைட்ஸ் அணியும் நேற்று மாலை மோதின.

முதலில் ஆடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் 7.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்த போது திடீரென மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

வில்லியனுார் மோகித், ஜெனித் ஏனம் ராயல்ஸ், ரூபி ஒயிட் டவுன் அணிகள் சம புள்ளிகளை பெற்று இருந்ததால் ரன் ரேட் அடிப்படையில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் முதலிடம் பிடித்தது. முறையே மற்ற அணிகள் 2வது, 3வது இடத்தையும், மாகி அணி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

இன்று (24ம் தேதி) மதியம் 2 மணிக்கு நடக்கும் முதல் தகுதி சுற்று போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும், ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது.

மாலை 6:00 மணிக்கு நடக்கும் மற்றொரு தகுதி சுற்று போட்டியில் ரூபி ஒயிட் டவுன் அணியும், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதுகின்றது.

அதில் வெற்றி பெறும் அணி இன்று மதியம் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியுடன் நாளை (25ம் தேதி) மாலை 6:00 மணிக்கு நடைபெறும் தகுதி சுற்று இரண்டாவது போட்டியில் விளையாடும்.

அதில் வெற்றி பெறும் அணி வரும் 27ம் தேதி மாலை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும்.

இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தையும், தோல்வியடையும் அணி ரன்னர் பட்டத்தையும் பெறும்.

Advertisement