அரசில் 7,000 காலி பணியிடங்களை நிரப்புவது எப்போது: தேர்தல் நெருங்குவதால் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்குள் 7,000 அரசு பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என, பட்டதாரி இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த காலி பணியிடங்களை நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து தொடர்ச்சியாக, அரசு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை, 3,000 அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, அந்த பணியிடங்களை 90 சதவீதம் நிரப்பியுள்ளன. மீதி 7,000 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது.
நிர்வாக சீர்த்திருத் துறையின் தேர்வு பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலேயே நிரந்தர பிரிவு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தான் அனைத்து அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
இவ்வளவு குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு இதுவரை அரசு போட்டித் தேர்வுகளை நடத்தியதே பெரிய சவாலாக அமைந்தது. ஆனால் அரசு பணியிடங்களை நிரப்புவதில் எதிர்பார்த்த வேகம் இல்லை.
அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அப்படி பார்த்தால், ஆட்சிக்காலம் 7 மாதம் தான் உள்ளது. அதற்குள் காலியாக உள்ள 7,000 அரசு பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் இல்லை. தற்போதுள்ள வேகத்தில் அரசு பணியிடங்களை நிரப்பினால், இன்னும் அதிகபட்சமாக 800 பணியிடங்களை தான் நிரப்ப முடியும்.
அரசு பணியிடங்களை பொருத்தவரை, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் தான் அனைத்து பணியிடங்களும் நிரப்ப முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பதவி உயர்வு, கோர்ட் வழக்கு, நிர்வாக சிக்கல் என பல்வேறு காரணங்களால், மெதுவாக நிரப்பப்பட்டு வருகிறது.
எனவே, ஆமை வேகத்தில் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதால், தள்ளி போடப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வயது முதிர்ந்த பட்டதாரிகளின் வாய்ப்பினை தட்டி பறித்து விடும் என்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மாநிலம், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு ஊழியர்கள் பற்றிய விபரங்களை நிடி ஆயோக் திரட்டி வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர் காலி பணியிடங்கள் பற்றிய விபரங்களையும் நிடி ஆயோக் கேட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, மத்திய அரசிடம் விரைவாக அனுமதி பெற்று காலியாக உள்ள 7 ஆயிரம் அரசு பணியிடங்களையும் நிரப்ப புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி