தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம்மாதிரி நுாலகமாக மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல்மயமாக்க நிதி ஒதுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம் ஆசியாவின் எஞ்சிய பழமையான நுாலகங்களில் ஒன்று. இது 16 ம் நுாற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. பின் மராட்டிய மன்னர்களால் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) மேம்படுத்தப்பட்டது.
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தியில் 60 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாசார பாரம்பரிய பங்களிப்புகள். ரூ.1.65 கோடியில் ஓலைச்சுவடிகள், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், சமஸ்கிருத புத்தகங்கள் மொழிபெயர்ப்பு, ஓவியங்களை பாதுகாக்க மற்றும் நுாலகத்தை சீரமைக்க அரசு 2012 ல் திட்டமிட்டது. இதை முழுமையாக செயல்படுத்தவில்லை. அலுவலர் பணியிடங்களை நிரப்பவில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. இதனால் அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேதமடைகின்றன.
மத்திய கலாசாரத்துறை தேசிய நுாலகங்கள் இயக்கத்தை 2014 ல் துவக்கியது. இதன்படி தேசிய மெய்நிகர் நுாலகம் உருவாக்குதல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் நுாலகங்களை மேம்படுத்துதல் மற்றும் நெட்வொர்க் இணைப்பு வழங்கும் நோக்கில் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதிகள் மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், தொல்லியல்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.