மணல் திருட்டை தடுக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை  உயர்நீதிமன்றம் உத்தரவு

1

மதுரை: கரூர் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கரூர் புஞ்சை கடம்பன்குறிச்சி மாதவன் தாக்கல் செய்த பொதுநல மனு:

கரூர், நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், வாங்கல்-மோகனுாரை இணைக்கும் ரயில்வே பாலம் உள்ளிட்ட ஆற்றின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளுகின்றனர். கேரளா, கர்நாடகாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாகராஜன் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மணல் அள்ளுவதை அரசு நிறுத்தியுள்ளது. சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டால், மனுதாரர் அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

புகார் கிடைத்ததும் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு தொடர்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளுவதை தடுப்பதில் கடமை தவறும் அல்லது கவனக்குறைவாக செயல்படும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement