மன உளைச்சலால் பதவி விலக முடிவு: திருச்சி டி.எஸ்.பி., பரபரப்பு கடிதம்

2

திருச்சி: மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரி, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பரத் ஸ்ரீனிவாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் பரத் ஸ்ரீனிவாஸ், 55. இவர், தமிழக காவல் துறையில், எஸ்.ஐ.,யாக 1997ல் சேர்ந்தார். பதவி உயர்வுகளுக்கு பின், தற்போது, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை ஒழித்தார். சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்

அதற்கு முன், திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், 'மன உளைச்சல் காரணமாக பணியில் நீடிக்க முடியவில்லை. விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு, அவர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக, என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால், விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காவல் துறையில், திருச்சியை தலைமையிடமாக வைத்து செயல்படும் மத்திய மண்டலத்தில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் மன உளைச்சல் காரணமாக, ஏற்கனவே விருப்ப ஓய்வு கோரி இருந்தார்.

தன் வாகனம் பறிக்கப்பட்டதாக பேட்டியும் அளித்தார். இதனால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, தற்போது நெஞ்சு வலி காரணமாக, சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மத்திய மண்டலத்தில் மேலும் ஒரு டி.எஸ்.பி., விருப்ப ஓய்வு கோரி, உள்துறை செயலருக்கு கடிதம் எழுதி இருப்பது, போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement