'பிரிட்டன் ஒப்பந்தம் திருப்பூருக்கு பெரிய பயன்'

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அறிக்கை:

இந்தியா - பிரிட்டன் இடையிலான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஜவுளி, காலணிகள், ஆபரணங்கள், கடல் உணவுகளுக்கு, பிரிட்டனில் நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும்.


இந்த ஒப்பந்தம் வாயிலாக, இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை சேர்ந்தவர்கள், பெரிதும் பயன்பெறுவர்.




ஜவுளிக்கு, 12 சதவீத இறக்குமதி வரி, ரசாயன பொருட்களுக்கு, 8 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது.



இதன் வாயிலாக, பின்னலாடை நகரமான, திருப்பூர் பெரிதும் பயன்பெறும். ஒப்பந்தம் வாயிலாக, சந்தைப்படுத்தல் மேம்படுவதுடன், இரு தரப்பு வர்த்தகம், ஆண்டுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்க உள்ளது. உழைக்கும் மக்களின் நலன் சார்ந்து முடிவெடுக்கும், பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பெருமிதம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:



பிரதமர் மோடியின் சமீபத்திய பயணத்தில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


இது, தமிழகத்தில் இருந்து ஜவுளி, கடல் உணவு பொருட்கள், காலணிகள், நகைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.




குறிப்பாக, காஞ்சிபுரம் புடவைகள், திருப்பூர் பின்னலாடைகள், ஈரோடு மஞ்சள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வேலுார் காலணிகள், தகவல் தொழில்நுட்ப சேவை ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும்.



பல ஆண்டுகளாக பேச்சிலேயே இருந்த வர்த்தக ஒப்பந்தத்தை, தன் பயணத்தால் சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement