காயலான் கடைக்கு போகும் சாலையோர தடுப்பு ஜி.என்.டி., சாலையில் தத்தளிக்கும் பாதசாரிகள்

சென்னை, ஜி.என்.டி., சாலையில் தடுப்புகள் சேதம் அடைந்துள்ளதால், பாதசாரிகள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது.

இந்த நிதியில், சாலை மைய தடுப்பு, சாலையோர இரும்பு தடுப்பு, ஒளிரும் சோலார் விளக்குகள், சாலைகளில் எச்சரிக்கை கோடுகள், மின்விளக்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜி.என்.டி., சாலையில், பேசின்பாலம் முதல் மாதவரம் ரவுண்டானா வரை, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, நடைபாதை உயர்த்தி கட்டப்பட்டது.

ரூ.20 கோடி செலவு சாலையில் பாதசாரிகள் இறங்கி செல்லாதவாறு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது.

ஆனால், ஒப்பந்த நிறுவனம் முறையாக பணி செய்யவில்லை. தடுப்புகள் முறையாக வெல்டிங் செய்து பொருத்தாததால், அவை பல இடங்களில் தொங்கியபடி உள்ளன.

சாலையின் இருபுறங்களிலும், பழைய கடைகளை இடித்து, புதிய கட்டடங்களை கட்டியோர், வாடிக்கையாளர் வந்து செல்வதற்கு இடையூறு இருப்பதாக கருதி, இரவோடு இரவாக சாலை தடுப்புகளை அகற்றிவிடுகின்றனர்.

உடைக்கப்பட்ட தடுப்புகளை எடுத்துச்செலும் மர்மநபர்கள், அவற்றை உடைத்து காயலான் கடைகளில் விற்று காசு பார்க்கின்றனர். சாலையோர பாதுகாப்பு தடுப்பு அகற்றப்பட்டதால், பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்கின்றனர்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரி அருகே, சாலை பாதுகாப்பு தடுப்புகள் கயிறு கட்டி மரத்தில் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. கல்லுாரிக்கு சென்று வரும் மாணவர்களுக்கு, இது இடையூறாக உள்ளது.

கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், அரசு பேருந்துகள் அதிகளவில் பயணிக்கும் சாலையில், அபாயகரமாக உள்ள சாலை தடுப்புகளை, மீண்டும் முறையாக சீரமைக்க வேண்டும்.

தடுப்புகளை அகற்றிய கட்டட உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement