பள்ளிகளில் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர்; மத்திய அரசு முடிவு

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி ஹிந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். அவர்களின் திலகத்தை குறிக்கும் விதமாக, இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆபரேஷன் இந்திய ராணுவத்தின் சாதனைகளில் ஒன்றாக பொறிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க என்.சி.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது மற்றும் இந்திய ராணுவத்தின் வலிமை குறித்து மாணவர்கள் அறியும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் ஒரு பகுதியும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மற்றொரு பகுதி என இருகட்டங்களாக பாடத்திட்டம் வகுக்கப்பட இருக்கிறது. இதில், நம் நாட்டு ராணுவத்தின் சாதனைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
அதேபோல, விண்வெளியில் சந்திராயன் முதல் ஆதித்யா எல்1 வரையிலான இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கேப்டன் சுபான்ஷூ சுக்லா சென்று வந்தது உள்ளிட்ட விவரங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க என்.சி.ஆர்.டி., முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


