உலக கோப்பை செஸ் தொடர் பைனல்; திவ்யா - ஹம்பி மோதிய முதல் சுற்று டிரா

பதுமி: ஜார்ஜியாவில் நடந்த உலக கோப்பை செஸ் தொடர் பைனலின் இந்திய வீராங்கனைகள் திவ்யா மற்றும் ஹம்பி மோதிய முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. நாளை இரண்டாவது சுற்று ஆட்டம் நடக்கிறது.
ஜார்ஜியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். நாக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா மற்றும் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, முதல்முறையாக பைனலுக்கு முன்னேறினர். அதுமட்டுமில்லாமல், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
இந்த நிலையில், இரு சுற்றுகளாக நடக்கும் பைனலின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடந்தது. திவ்யா வெள்ளை நிற காய்களுடனும், ஹம்பி கருப்பு நிற காய்களுடனும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 41வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இருவரும் தலா 0.50 புள்ளிகளைப் பெற்றனர்.
இதன் காரணமாக, நாளை 2வது சுற்றுப் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் முதலில் 1.5 புள்ளி பெறுபவர் மகுடத்தை சூடுவார். மாறாக நாளை நடக்கும் போட்டியும் 'டிரா' (1.0-1.0) ஆகும் பட்சத்தில், ஜூலை 28ல் 'டை பிரேக்கர்' நடக்கும். இதில் சாதிப்பவரே புதிய சாம்பியன் ஆவார்கள்.
