குரைக்கக்கூடாது; வால் ஆட்டினால் போதும்; வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்களுக்கு சிறப்பு பயிற்சி!

புதுடில்லி; வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் போது குரைக்கக் கூடாது என்ற கட்டளையின் கீழ் மோப்ப நாய்களுக்கு டில்லி போலீஸ் சிறப்பு பயிற்சி அளித்துள்ளது.
தலைநகர் புதுடில்லியில் ஆக.15ம் தேதிக்கான சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசாரும் இறங்கி உள்ளனர். வழக்கமான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது நாய்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்த நாய்கள் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தால் அதை உணர்த்தும் விதமாக அவை தமது பயிற்றுநர்களிடம் குரைக்கும். இதை தொடர்ந்து, மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடத்தில் அல்லது பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் குண்டுகளை அதற்கென பிரத்யேகமாக இருக்கும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உடனடியாக அகற்றுவர்.
குறிப்பாக, சுதந்திர தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது 24 மணி நேரமும் இந்த கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், இப்போது மாற்றம் தரும் வகையில், குண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள், குரைக்காமல் அமைதியாக தமது எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளது. அதாவது குண்டுகளை கண்டுபிடித்தால், சத்தம் போடக்கூடாது என்பதே ஆகும்.
இதுகுறித்து டில்லி போலீஸ் மோப்ப நாய்கள் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர டோக்ரா கூறி உள்ளதாவது;
குண்டுகள் இருந்தால் அமைதியான முறையில் அதை வெளிப்படுத்த வேண்டும். குரைக்கக்கூடாது என்று மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அமைதியாக உட்கார வேண்டும், வாலாட்டி குண்டுகளை இருப்பதை உணர்த்த வேண்டும் என்று நாய்களுக்கு பயிற்சி தரப்பட்டு உள்ளது.
சில குறிப்பிட்ட வகை வெடிகுண்டுகள் குரைப்பது போன்ற ஒலிகள் மூலம் வெடித்துவிடும் அபாயம் உள்ளது. எனவே தான் நாய்களுக்கு இப்படிப்பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி போலீசில். மோப்ப நாய்கள் பிரிவில் தற்போது 64 நாய்கள் உள்ளன. அவற்றில் 58 நாய்களுக்கு வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 3 நாய்கள் போதை பொருட்கள் கண்டறிதல், 3 நாய்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும்
-
ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம்; இந்தியா - இங்கி., 4வது டெஸ்ட் போட்டி டிரா
-
பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே : வாக்காளர் பட்டியல் குறித்து எழும் கேள்வி
-
பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி
-
திவ்யா-ஹம்பி மீண்டும் 'டிரா': உலக கோப்பை செஸ் பைனலில்
-
வெள்ளி வென்றார் அன்கிதா: உலக பல்கலை., தடகளத்தில்
-
உலக விளையாட்டு செய்திகள்