ஆயிரம் சந்தேகங்கள்: கல்விக்கடன் பெற 'சிபில் ஸ்கோர்' தேவையா?

எனக்கான பென்சனுக்காக பிடிக்கப்பட்ட பி.எப்.,தொகையை, தற்போது திரும்ப பெற வழி கூறவும். அல்லது அப்படியே பங்குச் சந்தை முதலீடாக மாற்ற வழி உள்ளதா? பென்ஷன் பெற விரும்பாதவர்களுக்கு என்ன வழி உள்ளது?
பூபதி, ஈரோடு.
உங்கள் யு.ஏ.என்., எண்ணைக் கொண்டு, பி.எப்., வலைத்தளத்துக்குள் நுழைந்தால், அங்கே 'ஆன்லைன் சர்வீசஸ்' என்றொரு பகுதி உண்டு. அதில் உங்கள் தேவைக்கேற்ப உள்ள படிவத்தை நிரப்பி, பதிவு செய்யலாம்.
பி.எப்.,இல் இருந்து பணத்தை எடுத்துவிட்டுத் தான், நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியுமே தவிர, அப்படியே பி.எப்., வலைத்தளத்தில் இருந்தே செய்ய முடியாது.
பென்ஷன் பெற விரும்பாதவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. 'நான் பி.எப்., சந்தா செலுத்த விரும்பவில்லை' என்று நீங்கள் வேலைக்குச் சேர்ந்த முதல் நிறுவனத்தில் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் யு.ஏ.என்., எண் உருவாக்கித் தந்திருக்க மாட்டர். யு.ஏ.என்., உருவாக்கப்பட்டு விட்டால், பென்ஷன் வேண்டாம் என்று சொல்ல முடியாது.
மகனின் வெளிநாட்டுக் கல்விக்காக வாங்கிய வங்கிக் கடனில் இருந்து, கல்விக் கட்டணமாக வெளிநாட்டுக்கு அனுப்பும் தொகைக்கு, வருமான வரி விதிப்பது பகல் கொள்ளை தானே?
என்.சம்பத், சென்னை.
நீங்கள் டி.சி.எஸ்., எனப்படும் 'டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ்' பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த விஷயத்தில் கணிசமான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே! பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுக்காக, வங்கியில் கடன் வாங்கி அனுப்பும் பணத்துக்கு டி.சி.எஸ்., நீக்கப்பட்டுள்ளதே?
இன்றைய தேதியில், பெரும்பாலான பெற்றோர் வெளிநாட்டுக் கல்விச் செலவுக்கு கடன் வாங்கித் தான் அனுப்புகின்றனர். இதில் எங்கே பகல் கொள்ளை வந்தது என்று புரியவில்லை.
என் மகனுக்காக கல்விக் கடன் வாங்க விரும்புகிறேன். அதற்கு சிபில் ஸ்கோர் தேவையா? எந்த வங்கியில் லோன் ஈஸியாக கிடைக்கும்?
ஜாஸ்மின், வாட்ஸாப்.
பொதுவாக கல்விக் கடனுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று சொல்கின்றனர். ஆனால், கடன் வாங்கக் கூடிய குடும்பத்துக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வலிமை இருக்கிறதா என்பதைக் கணிக்க, வங்கிகள் சிபில் ஸ்கோர் பார்க்கின்றன.
பொதுத் துறை வங்கிகளில் முயன்று பாருங்கள். தகுதியுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை என்பதால், அதைப் பொதுத் துறை வங்கிகள் நிறைவேற்றுகின்றன.
50,000 ரூபாய் போன்ற சிறிய தொகையை முதலீடு செய்து, நல்வழியில் பெருக்குவது எப்படி? வழி காட்டவும்.
பி.நந்தினி, மின்னஞ்சல்.
ஓரளவுக்குப் பாதுகாப்போடு, வழக்கத்தைவிடக் கூடுதல் லாபம் என்ற நோக்கில் அணுகினால், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது உகந்தது. வங்கிகளில் ஆண்டுக்கு, 6.50 - 7 சதவீதம் வட்டி கிடைக்கும் நிலையில், மியூச்சுவல் பண்டுகள் 12 - 14 சதவீதம் ரிட்டர்ன் தரக்கூடும்.
உங்களுக்கு ரிஸ்க் எடுப்பதற்கே துணிவில்லை, மியூச்சுவல் பண்டுகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், அருகில் உள்ள அஞ்சலகத்தில் போய் விசாரியுங்கள். அவர்களிடம் பல திட்டங்கள் உள்ளன. உங்கள் மனத்துக்கு எது பிடித்திருக்கிறதோ, அதில் முதலீடு செய்யுங்கள்.
மூத்த குடிமகனான என் பணி முதிர்வு பலன்களை, தமிழ்நாடு பவர் பைனான்ஸில் முதலீடு செய்து இருக்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது ரேட்டிங் -BBB என்ற செய்தி வருகிறது. இதன் பொருள் என்ன? இதனால் என் முதலீடு பாதிக்கப்படுமா?
எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை.
இதற்கு, 'இக்ரா டிரிப்பிள் பி மைனஸ் மதிப்பீடு' என்று அர்த்தம். இக்ரா என்பது ஒரு ரேட்டிங் நிறுவனம். இந்த ரேட்டிங் நிறுவனம், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனுடைய வரவு செலவு விபரங்களைப் பார்த்த பின்னர், அது 'நிலையானது' (ஸ்டேபிள்) என்று மதிப்பீடு செய்துள்ளது.
அதாவது, முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருவதற்கு அந்நிறுவனத்துக்கு போதுமான வசதி இருக்கிறது என்று பொருள். இது தமிழக அரசு நிறுவனம் என்பதால் தைரியமாக இருக்கலாம்.
என் பெயரில் உள்ள ஷேரை என் மகளுக்கு கிப்ட் ஆக மாற்ற முடியுமா?
ஏ.கந்தசாமி, சென்னை.
மாற்றலாம். பங்குகளை நீங்கள் 'பரிசாக' உங்கள் மகளுக்கு வழங்குவதால் நீங்களோ, அதைப் பெறுவதனால், உங்கள் மகளோ எந்த வரியும் செலுத்த வேண்டாம்.
ஆனால், வருங்காலத்தில், உங்கள் மகள் அந்தப் பங்குகளை விற்பனை செய்யும்போது, அதற்கு நீங்கள் அந்தப் பங்கை என்றைக்கு வாங்கினீர்களோ, அன்றிலிருந்து கணக்கு போடப்பட்டு, நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஸ்மால் பைனான்ஸ் வங்கி களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
ரவீந்திரன், சென்னை.
பாதுகாப்பானது தான். ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி, அதன் அனுமதியுடன் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் செயல்படுகின்றன.
எனக்கு நீண்ட நாட்களாக ஸ்டாக் ஸ்பிளிட் மற்றும் போனஸ் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி புத்தகங்களில் படித்தும், யு டியூபில் கேட்டும் கூட புரியவில்லை. அதை எளிமையாக விளக்கவும்.
சந்துரு, மின்னஞ்சல்.
ஸ்டாக் ஸ்பிளிட், போனஸ் இரண்டினாலும், உங்களுக்கு ஒரு நிறுவனத்தின் கூடுதல் ஷேர்கள் கிடைக்கும். கூடுதல் முதலீடு இல்லாமல் கூடுதல் ஷேர் என்பது ஒரு மனரீதியான திருப்தி தான். மற்றபடி, இந்த இரண்டு விதங்களிலும், உங்கள் முதலீட்டு மதிப்பு இரட்டிப்பாகி விடாது.
போனஸ் ஷேர் என்றால், நிறுவனம் லாபகரமாக இருக்கிறது என்று அர்த்தம். ஈவுத் தொகையாக தருவதற்குப் பதில் கூடுதல் பங்குகளாகத் தருகின்றனர். ஸ்டாக் ஸ்பிளிட் என்றால், அந்த நிறுவனம் மேலும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க முயல்கிறது என்று அர்த்தம். இவ்விரண்டினாலும், முதலீட்டாளர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881
மேலும்
-
குமுளி மலைப் பாதையில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்
-
உண்மையை மறைத்த மனுதாரர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்
-
டூவீலர் விபத்து மெக்கானிக் பலி
-
ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்திருவிழா
-
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
-
மாவட்ட கிரிக்கெட்: எவர் கிரீன், ஸ்மாஷர்ஸ் அணிகள் வெற்றி