ஸ்டாலின், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வீடுகளுக்கு, ஒரே நேரத்தில், மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் யார் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில், முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோதனை அதேபோல, சென்னை நீலாங்கரையில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையை, நேற்று காலை 5:30 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

போனை எடுத்தவரிடம், 'முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன' எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த தகவல், நீலாங்கரை மற்றும் தேனாம்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ஸ்டாலின் மற்றும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

சோதனையில் எதுவும் சிக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்டாலின் மற்றும் விஜய் வீடுகளுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வர், 22, கைது செய்யப்பட்டார்.

இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். தற்போதும், இவர் மிரட்டல் விடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் அறைக்கு, நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு, இ - மெயில் ஒன்று வந்தது.

அதில், 'விமான நிலையத்தின், 'வி.வி.ஐ.பி., லவுஞ்ச்' மற்றும் விமான நிலைய கழிப்பறைகளில், சக்திவாய்ந்த, 'நைட்ரிக் -9' என்ற வெடிகுண்டுகள், பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி, விமான நிலைய இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, விமான நிலைய பாதுகாப்பு குழு கூட்டம் கூட்டப்பட்டது.

விமான நிலையத்தின் உட்பகுதி, முக்கிய பிரமுகர்கள் ஓய்வெடுக்கும் பகுதி, கழிப்பறை, ஓடுபாதை, விமான நிறுத்தம், எரிபொருள் நிரப்பும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில், அது புரளி என்பது தெரியவந்தது.

விமானம் தாமதம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து, விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, ஷார்ஜா செல்லும் விமானங் கள், 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

அதேபோல, சென்னை அண்ணா பல்கலைக்கும் மர்ம நபர் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துஉள்ளார். அங்கு நடந்த சோதனையில் புரளி என தெரியவந்தது.

Advertisement