பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு

11

புதுடில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு எடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிக்கவும், இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் போது தான் அமைதி காணமுடியும் என்று பார்லி விவாதத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசினார்.



பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் இன்று பார்லிமெண்டில் தொடங்கியது. விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து நீண்ட உரையாற்றினார்.


தமது உரையில், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவர் விளக்கினார். ராஜ்நாத் சிங் பேச்சைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் எம்.பி.,க்களும் அவையில் பேசினார்.


திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசியதாவது;


நாட்டில் கொரோனா காலத்தின் போது உயிர்களை காப்பாற்றியது மருத்துவர்கள். ஆனால், பாராட்டுகள் எல்லாம் பிரதமர் மோடிக்குச் சென்றது. ஆபரேஷன் சிந்தூரில் அனைத்தையும் பணயம் வைத்தது ராணுவம்தான். ஆனால் மீண்டும், பாராட்டு பிரதமர் மோடிக்குத் தான் சென்றது.


அமெரிக்க அதிபர் இந்தியர்களுக்காக முடிவு எடுப்பது என்பது வெட்கக்கேடான விஷயம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடியுடன் இருக்கும் போது அமெரிக்க அதிபர் எப்படி முடிவு செய்ய முடியும்?


போர் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இல்லை என்று பிரதமர் மோடி ஏன் ஒரு முறையாவது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடவில்லை? பயங்கரவாதத்திற்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.


பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் நாங்கள் அரசின் பக்கம் நின்றோம். பாகிஸ்தானுக்கு எதிராக உண்மையாக நீங்கள் நின்றிருந்தால் உங்களை ஆதரிக்கிறோம். ஆனால் போர் நிறுத்தத்திற்கு ஏன் ஒப்புக் கொண்டீர்கள்?


பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு எடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிக்கவும், இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் போது தான் அமைதி காணமுடியும்.


இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement