யு.பி.ஐ.,யில் புதிய மாற்றங்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்

2

புதுடில்லி: வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் யு.பி.ஐ.,யில் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ம் தேதி முதல் அவை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


'யுனிபைடு பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்' எனப்படும், யு.பி.ஐ., இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றங்களை செய்ய உதவும் ஒரு அமைப்பாக உள்ளது.


இதன்படி, 'மொபைல் போன்' செயலி வாயிலாக பல வங்கிக் கணக்குகளை இணைத்து பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் ஒரு எளிய வழியை வழங்குகிறது. யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையாகவும் உள்ளன.


என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால், 2016ல் துவங்கப்பட்ட யு.பி.ஐ., வசதி, பயனர்கள் பல வங்கிக் கணக்குகளை ஒரே செயலியுடன் இணைத்து உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. இது, 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடியது.


இந்நிலையில், யு.பி.ஐ.,யில் புதிய விதிமுறைகளை என்.பி.சி.ஐ., அறிவித்துள்ளது. 'கூகுள் பே, பேடிஎம், போன் பே' உள்ளிட்ட வங்கி கணக்கை கையாளும் அனைத்து செயலிகளிலும், இந்த விதிமுறைகள் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:



யு.பி.ஐ., பயனர்கள், இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே தங்கள் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும்.


இணைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். இது, கணினி பயன்பாட்டு நெரிசலைக் குறைப்பதற்கும், செயலியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆட்டோ பே, எனப்படும் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுத்துக் கொள்ளும் செயல்முறைகளுக்கு குறிப்பிட்ட நேரம் வகுக்கப்பட்டுள்ளது.




மாதாந்திர சந்தா, இ.எம்.ஐ., போன்ற திட்டமிட்ட கட்டணங்கள், இனி காலை 10:00 மணிக்கு முன்பாகவும், மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், இரவு 9:30 மணிக்கு பிறகும் மேற்கொள்ளப்படும்.



அதேபோல், தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை நாளொன்றுக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.



புதிய விதிமுறைகளின்படி, சரியான நபருக்கு பணம் செல்வதை உறுதி செய்யும் வகையில், பணம் பெறுபவரின் பெயரை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



யு.பி.ஐ., மற்றும் வங்கிகளின் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement