மாவட்டத்துக்கு ஒரு சூரிய கிராமம்; விரிவான திட்ட அறிக்கைக்கு 'டெண்டர்'

2

சென்னை: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி சூரிய கிராமம் அமைக்கும் பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும், ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது.


மத்திய அரசின், 'பி.எம். - சூர்ய கர் முப்தி பிஜிலி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில், சென்னை தவிர்த்த மற்ற, 37 மாவட்டங்களிலும், தலா ஒரு மாதிரி சூரிய கிராமம் அமைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்து உள்ளது.


இத்திட்டத்தின் கீழ், கிராமத்தில் உள்ள வீடுகள், பஞ்சாயத்து உள்ளிட்ட, அரசு அலுவலக கட்டடங்களுக்கு, சூரியசக்தி மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.



தெருவிளக்கு, குடிநீர் பணிகளுக்கு, சூரியசக்தி மின்சாரம் பயன்படுத்தப் படும்.

இத்திட்டம், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமங்களில், தலா, 1 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.




மாதிரி சூரியசக்தி கிராமம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் உதவ, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள், இத்திட்டப் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement