மகளை காதலித்தவர் ஆணவக்கொலை: எஸ்.ஐ., தம்பதி சஸ்பெண்ட்

திருநெல்வேலி; ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலையில், கைதான சுர்ஜித்தின் தந்தை, தாய் ஆகியோர் எஸ்.ஐ.,பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27. சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். துாத்துக்குடியில் தனியார் பள்ளியில் படித்தபோது உடன் படித்த மாணவியுடன் காதல் ஏற்பட்டது.

அந்த பெண் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தாத்தாவை காதலி பணியாற்றும் மருத்துவமனைக்கு கவின் அழைத்து சென்றார்.

ஜூலை 27 மதியம் 3:00 மணிக்கு கவினை சமாதான பேச்சு வார்த்தைக்கு டூவீலரில் அழைத்துச் சென்ற காதலியின் தம்பி சுர்ஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

கவின் பட்டியல் இனத்தவர். அவரது காதலி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். எனவே ஆணவக்கொலையாக கருதப்பட்டது.

தமிழ்ச்செல்வி புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.,களான பெண்ணின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நீதி வேண்டும் கவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற பெற்றோர் மறுத்துவிட்டனர். நேற்று ஆறுமுகமங்கலத்தில் கவின் பெற்றோர் சந்திரசேகர், தமிழ் செல்வியை சந்தித்த போலீஸ் அதிகாரிகள், அரசின் முதற்கட்ட நிவாரண தொகை வந்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு நிதி வேண்டாம் இந்த சம்பவத்தில் நீதி வேண்டும் என தெரிவித்தனர். கொலைக்கு தூண்டுதலாக இருந்த தந்தை தாய் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

ஒரு தலைக் காதல் அல்ல... துவக்கத்தில் கவின் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக பெண் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கவினும் காதலியும் ஓட்டல்கள், கேளிக்கை தலங்களுக்கு பலமுறை சென்றுள்ளனர்.

இந்த போட்டோக்கள் நேற்று வெளியாயின. எனவே கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

கவின் அலைபேசியை போலீசார் கைபற்றி விசாரிக்கின்றனர். அதன் பாஸ்வேர்ட் பெறுவதற்காக கவின் தம்பி பிரவீன் செல்கர், மாமா ஆகியோர் நேற்று திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.

துணை கமிஷனர் பிரசன்னகுமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.கவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement