பா.ஜ.,வை கேள்வி கேட்க காங்கிரசுக்கு தகுதியில்லை; வாய் சவடால் விட இது காங்., அரசு அல்ல; மோடி அரசு

3


''வெறுமனே பேசிக் கொண்டிப்பதற்கும், ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கும், இது ஒன்றும் மன்மோகன் சிங் அரசு அல்ல. நடப்பது மோடி அரசு. இங்கு செயல் மட்டுமே பேசும்,'' என, லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக கூறினார். லோக்சபாவில் நேற்று, 'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:


ஹூரியத் தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது. அவர்களுக்கு, வி.வி.ஐ.பி., அந்தஸ்து அளித்தது. தற்போது, ஹூரியத் என்ற அமைப்பே இல்லை.


மறுக்க முடியாது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது நாங்கள் தான். காங்கிரஸ் ஆட்சியில் தாவூத், பட்கல், சலாவுதீன் போன்ற முக்கிய பயங்கரவாதிகள், நம் நாட்டில் இருந்து தப்பினர். அப்போது, பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக நடமாடியதை யாரும் மறுக்க முடியாது.



காங்., ஆட்சியில், 27 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. ஆனாலும், அந்த அரசு எந்த உறுதியான நடவடிக்கையுமே எடுக்கவில்லை.



முதலில், எங்களை கேள்வி கேட்க காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை; உரிமையும் இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் காங்., செய்த தவறை, நாங்கள் சரி செய்துள்ளோம்.



நேருவின் தவறான கொள்கைகளால், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம் கையை விட்டுப்போனது. நம் நாட்டின் பிரிவினைக்கும் காங்கிரசே முழு காரணம். சீனாவின் மீது மென்மையான போக்கையே, நேரு கொண்டிருந்தார். ராஜிவ் கூட அதை தான் கடைப்பிடித்தார்.


அதனாலேயே, நாம் மிகப்பெரிய விலையை தர வேண்டியிருந்தது. 1971ல், 93,000 பாக்., வீரர்கள் சரண் அடைந்தனர். அந்நாட்டின், 15,000 சதுரடி பரப்பு நம் கைகளில் கிடைத்தது.



அப்போதும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுக்கவில்லை. சிம்லா ஒப்பந்தத்தில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரையே மறந்து விட்டனர்.



அதை, அப்போதைய பிரதமர் இந்திரா கேட்டிருக்க வேண்டும்; கேட்கவில்லை. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் கிடைத்திருந்தால், இன்று நாம் அங்கிருந்தபடி தாக்குதலை நடத்தி இருப்போம்.



கடந்த, 2002ல், 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். அதை காங்., எதிர்த்தது. 2004ல் ஆட்சிக்கு வந்ததும், சோனியாவும், மன்மோகன் சிங்கும் அச்சட்டத்தை ஒழித்துக் கட்டினர்.



யாருக்காக இதை செய்தனர்? பொடா சட்டத்தை ஒழித்த நீங்கள், நிச்சயம் மோடியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளை பாராட்டவே மாட்டீர்கள்.



வருந்தவில்லை டில்லியின் பாட்லா ஹவுசில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட போது, சோனியா கண்ணீர் வடித்தார். ஆனால், அந்த தாக்குதலில் பலியான போலீசாருக்காக அவர் வருந்தவில்லை.



பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலைமான் உட்பட மூன்று பேரை நம் படைகள் கொன்றுள்ளன. அவர்களின் ஆயுதங்கள், பஹல்காம் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒத்துப்போகின்றன. அவர்கள் கொல்லப்பட்டதால் காங்., மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது.



பஹல்காமிற்கு பழிதீர்க்கவே, 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடத்தப்பட்டது. காங்கிரசால் முடியாததை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். வெறுமனே பேசிக் கொண்டிருப்பதற்கும், ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கும், இது ஒன்றும் மன்மோகன் சிங் அரசு அல்ல; மோடி அரசு.



இங்கு செயல் மட்டுமே பேசும். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து தான் வந்தனரா என, முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்.



இதன் மூலம் பாகிஸ்தானை தப்ப விட பார்க்கிறார். நம் நாட்டில் இருந்து கொண்டு எப்படி தான் பாக்., மனநிலையில் காங்கிரசும், அதன் தலைவர்களும் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


@quote@ ராணுவ நடவடிக்கைக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். நேருவை, காங்., கூட நினைப்பதில்லை. ஆனால், அவரை பற்றி பா.ஜ., தான் பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெருமைகளையும், கலாசாரத்தையும் புகழ முடிந்த பிரதமரால், கீழடி கண்டுபிடிப்பை மட்டும் ஏற்க முடியவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் பெயருக்கு காரணம் என்ன தெரியுமா? கங்கையை வென்றவன் என்பது தான் அர்த்தம். தமிழன் நிச்சயம் கங்கையை வெல்வான். -- கனிமொழி லோக்சபா எம்.பி., - தி.மு.க.,quote



@quote@ இந்தியா - பாக்., போர் நிறுத்த அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்? தேச பாதுகாப்பு விஷயத்தில், வெளிநாட்டு தலைவர் தலையிட்டதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். நேரு, இந்திரா பற்றியே பேசிக் கொண்டிருக்காமல், போர் நிறுத்தம் ஏன் நடந்தது; எப்படி நடந்தது என்பதை அவர் விளக்க வேண்டும். - பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,quote


பஹல்காம் பயங்கரவாதிகள்

புகைப்படம் வெளியீடு

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை, ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் நம் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர். இதில், பயங்கரவாதி சுலைமான் புகைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், மற்ற இரண்டு பயங்கரவாதிகளான ஹபீப் தாஹிர், ஜிப்ரான் ஆகியோரின் படங்கள் நேற்று வெளியாகின.



@block_B@

கார்கேவிடம் நட்டா மன்னிப்பு

ராஜ்யசபாவில் ஆப்பரேஷன் சிந்துார் விவாதத்தில் பேசிய பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, 'காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சம மனநிலையை இழந்து விட்டார்' என, தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. தவறை உணர்ந்த நட்டா, தன் பேச்சுக்கு கார்கேவிடம் வருத்தம் தெரிவித்தார்.block_B




- நமது டில்லி நிருபர் -

Advertisement