18 வயதுக்கு குறைவான காதல் திருமணங்கள் அதிகரிப்பு; ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகம், விழிப்புணர்வு குறைவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான காதல் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் பள்ளி சூழலிலே விழிப்புணர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான காதல் திருமணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள், காதல் திருமணம் செய்து வெளியூரில் போய் வசிப்பது, பதின் பருவ கர்ப்பங்கள் போன்றவை இன்னும் குறைந்தபாடில்லை.
புகார் அளித்து காதலன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்கின்றனர். 18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டமிருந்தும் பல ஆண்கள் பொருட்படுத்தாமல் உள்ளனர். அதே போல் சிறுமிகளும் ஸ்மார்ட்போன் பயன்பாடால் சமூகவலைத்தளங்களில் இது போன்ற ஆண்களின் நட்பை பெற்று காதலிக்கின்றனர்.
இந்த கலாசாரம் அவர்களின் கல்வியை பெரிய அளவில் பாதிக்கிறது.பிளஸ் 2 கூட முடிக்காமல் சென்ற மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. மேலும் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோரும் உடனே வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அச்சிறுமிகளை உயர்கல்வி செல்ல விடாமல் 21 வயது ஆனதும் திருமணம் செய்து வைத்து விட வீட்டிலே வைத்திருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் 10ம் வகுப்பு முதலே பள்ளிகளில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டு அதனால் ஏற்படும் கவனச்சிதறலை குறைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடத்த வேண்டும். அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்று விழிப்புணர்வு வழங்கினாலும், அவை போதாத சூழல் உள்ளது.
விழிப்புணர்வை காட்டிலும் கவனச்சிதறலே மாணவிகளை அதிகம் சென்றடைகிறது. 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கும், அதற்கு அதிகமான ஆண்களுக்கும் அதே சூழல் தான். பலர் சிறுமிகளை காதலிப்பதாக உணர்வதே கிடையாது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை பின்பற்றுவது கிடையாது.
எனவே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். பெற்றோருக்கு உள்ள சமூக பொறுப்பு குறித்து பள்ளி மேலாண்மை குழுக்கள், நிர்வாகங்கள் தெளிவான அறிவுரை வழங்கி அவர்கள் மூலம் கண்காணிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.