நாடு முன்னேற இளைஞர்கள் தொழில்முனைவோராக வேண்டும்: ஐ.ஐ.டி., இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: ''நாட்டின் முன்னேற்றத்துக்கு, இளைஞர்கள் தொழில்முனைவோராக வேண்டும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசினார்.

அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,யின் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே மையம் சார்பில், 'டி.எஸ்.டி., - ஜி.டி.சி., இன்குபேட்' என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடந்தது.

அதில், 100 பல்கலைகள், ஆய்வகங்கள், 500க்கும் மேற்பட்ட ஆழ்ந்த தொழில்நுட்ப 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை உருவாக்கும் வகையில், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் துறையை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியதாவது;

எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும், ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவை வழங்குவதை, சென்னை ஐ.ஐ.டி., நோக்கமாக கொண்டுள்ளது. இதுவரை, 12,000க்கும் மேற்பட்ட மாணவர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் ஊக்குவித்துள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு ஒரு காப்புரிமை என்ற அடிப்படையில் துவங்கிய இது, தற்போது, 1.2 என்ற அளவில் வளர்ந்துள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், 1,000 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை உருவாக்குவதே தற்போதைய இலக்காக உள்ளது. பொதுவாக, இளைஞர்கள் தொழில் முனைவோராகவும், கண்டுபிடிப்பாளராகவும் மாறினால்தான், நாடு சுயசார்புடையதாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement