தனியார் நிறுவனத்தில் ரூ.71 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம், சேலத்தில் தனியார் நிறுவனத்தில், 71 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக ஊழியர் உள்பட இருவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், ஸ்வர்ணபுரி, ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார், 50. லைன்மேட்டில், 25 ஆண்டாக, 'எஸ்.கே.அசியோசியேட்' நிறுவனம் பெயரில், 4 சக்கர வாகனங்களுக்கு வங்கியில் கடன் பெற்று தரும் தொழில் செய்கிறார். 2023 செப்டம்பரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், நிறுவனத்துக்கு சரிவர செல்ல இயலவில்லை. அவரிடம், 8 ஆண்டாக வேலை பார்த்த, சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், 32, நிறுவனத்தை வழிநடத்தி வந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், நிறுவன கணக்கில் இருந்து, 46 லட்சம் ரூபாயை, அவரது சித்தப்பா சோமசுந்தரம் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வாடிக்கையாளரான, நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த பிரபுமணியுடன் கூட்டு சேர்ந்து நிறுவன பெயரை பயன்படுத்தி, போலி ஆவணம் தயாரித்து, தனியார் வங்கியில், 25 லட்சம் ரூபாய் கடன் பெற்று, இருவரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடனை திருப்பி கேட்டு, தனியார் வங்கி சில மாதங்களுக்கு முன் அனுப்பிய நோட்டீசால், சதிஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.
அவர் விசாரித்தபோது, கார்த்திக், அவரது சித்தப்பா வங்கி கணக்குக்கு, பணம் அனுப்பி மோசடி செய்ததும், தற்போது சித்தப்பா உயிருடன் இல்லை என்பதும் தெரிந்தது. மேலும் பிரபுமணியுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதுதொடர்பாக கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக கூறிய கார்த்திக், பின் சரிவர வேலைக்கு வராமல் போக்கு காட்டி, ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட சதிஷ்குமார் கடந்த, 24ல், சேலம் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின், கார்த்திக், பிரபுமணி மீது மோசடி, கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்தல் பிரிவுகளில் வழக்குப்
பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.