ரயில் சுரங்கப்பாதைக்கு நில அளவீடு எதிர்ப்பு தெரிவித்த 34 பேர் கைது

பனமரத்துப்பட்டி, மல்லுார் - வீரபாண்டி சாலை குறுக்கே, சேலம் - கரூர் ரயில் பாதை செல்கிறது. ஆனால் தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்கு

வரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் மல்லுார் சுற்றுவட்டார மக்கள், ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி, போராட்டம் நடத்தினர். சுரங்கப்பாதை அமைக்க, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் ரயில் பாதை அருகே உள்ள மக்கள், சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, ரயில்வே அதிகாரிகள், வருவாய்த்துறையினர், சுரங்கப்பாதை அமையும் பகுதியில் நில அளவீடு பணி மேற்கொண்டனர். அதற்கு மல்லுார் - வீரபாண்டி சாலையில் போலீசார் தடுப்பு வைத்து, போக்கு
வரத்தை திருப்பி விட்டனர். சேலம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் உள்ளிட்ட போலீசார், ரயில்வே போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்பகுதி மக்கள், சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தார்ச்சாலையில் நின்று வருவாய், ரயில்வே துறையினர், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தியும் சமாதானம் அடையாமல், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 27 பெண்கள் உள்பட, 34 பேரை, போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.

Advertisement