தேர்தல் வருவதால் கபட நாடகமாடும் முதல்வர்: பழனிசாமி

மானாமதுரை:முதல்வர் ஸ்டாலின் 4 வருடங்களாக மக்கள் பிரச்னைகளை கவனிக்காமல் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் உங்களுடன் ஸ்டாலின் போன்ற முகாம்களை நடத்தி கபட நாடகம் ஆடி வருவதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி மானாமதுரையில் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தை நேற்று துவக்கி அவர் பேசியதாவது: மக்கள் தான் எஜமானர்கள். நீதிபதிகள். மக்கள் தான் ஒரு அரசை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் ஸ்டாலின் மக்களை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என ஸ்டாலின் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. தமிழகத்தில் முதலமைச்சர் இருக்கிறாரா என்று சந்தேகமாக உள்ளது. ஸ்டாலின் உடல்நலம் சரியில்லாமல் போனதாக கூறி மருத்துவமனைக்கு சென்று அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு நாடகமாடி வருகிறார்.

துணை முதல்வர் உதயநிதி அவரது தாய் மாமா நன்றாக படித்ததால் டாக்டர் ஆகிவிட்டதாகவும்,தான் சரியாக படிக்காததால் துணை முதலமைச்சர் ஆக ஆகி விட்டதாகவும் பேசினார். உதயநிதியை மக்கள் துணை முதலமைச்சராக கொண்டு வரவில்லை.அவரது அப்பா முதல்வர் ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். உதயநிதி உழைப்பால் துணை முதலமைச்சராக வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் குறுக்கு வழியில் வந்ததால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அரசியலிலும், அதிகாரத்திலும் அவர்கள் தான் உள்ளனர்.

ஆப்பரேஷன் சிந்துார் பற்றி வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி., கனிமொழி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சென்று வந்த நிலையில் அங்கு கனிமொழி பேசியதற்கும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இது பற்றி வெளிநாட்டவர்கள் என்ன நினைப்பார்கள். அரசின் காழ்ப்புணர்ச்சியால் பா.ஜ.,வை பற்றி குறை கூறுகிறார்.

பஹல்காம் தாக்குதலில் மத்திய பா.ஜ.,அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக குடும்பத்தோடு மட்டுமே இருந்து வந்த முதல்வர் ஸ்டாலின் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளதால் உங்களுடன் ஸ்டாலின் போன்ற முகாம்களை நடத்தி கபட நாடகம் ஆடி வருகிறார்.

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே பழனிசாமி பேசியதாவது:

மின் கட்டணம் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு டிசைன் மானியம் 120 கோடி கொடுத்தோம். 2019ம் ஆண்டு கொடிசியா வர்த்தக மையத்தில் ஜவுளி கைத்தறி விற்பனையை பிரபலப்படுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.2 கோடி நிதியுடன் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது.

அ.தி.மு.க., அரசு சிறிய ஜவுளி பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது. மேலும் தற்போது நெசவாளர்களின் கூலி 10 நாட்களுக்கு ஒரு முறை காசோலையாக வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி மீண்டும் கூலியை அன்றைய தினமே பணமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

தற்போது பல கல்லுாரிகளில் பேராசிரியர் கிடையாது. மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் திறமையின் காரணமாக அனைத்து துறைகளிலும் சேர்த்து 140 விருதுகளை பெற்றது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது தான் இவர்கள் சாதனை. மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது சாதனை.

அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்கள் 5 லட்சம் காலியாக உள்ளது. ஐம்பதாயிரம் பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேர் என நான்கு ஆண்டுகளில் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி வந்தபின் இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Advertisement