என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: போலி ஆர்.டி.ஓ., வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி கணவர் புகார்

நாமக்கல், 'போலி ஆர்.டி.ஓ., வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களால், என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை; அதனால், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்' என, அவரது கணவர் நவீன்குமார், டி.ஜி.பி.,க்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; வங்கி உதவி மேலாளர். இவர், கடந்த ஜூனில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், 'தன் மனைவி தன்வர்த்தினி, 27, பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக கூறி, தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்' என, புகாரளித்திருந்தார். இதையடுத்து, தன்வர்த்தினியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், தன்வர்த்தினி ஜாமின் கேட்டு, நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், தன்வர்த்தினியின் கணவர் நவீன்குமார், டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு முன், குரூப்--1 தேர்வில் தேர்ச்சி பெற்று, தேவக்கோட்டையில் பயிற்சி கலெக்டராக பணியாற்றுவதாக கூறினார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும்போது, பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணி மாறுதல் கிடைத்துள்ளதாக கூறினார். இதனால், திருமணத்திற்கு பின், பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியில் வாடகை வீடு எடுத்து, தனிக்குடித்தனம் சென்றோம். ஆறு மாதத்திற்கு பின் தான், அவர் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பதும், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
தன்வர்த்தினி, 'ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுகிறேன்' என, என்னிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது. அதில், உயரதிகாரிகள் கையெழுத்து, அரசு முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலித்து, போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வழங்கியுள்ளேன். இந்த மோசடியை தன்வர்த்தினியால் மட்டும் செய்திருக்க முடியாது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். தன்வர்த்தினி படித்த பள்ளிகளில், அவர் சப்-கலெக்டர் ஆனதாக பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இதுவரை அப்பள்ளிகளில், போலீசார் விசாரணை நடத்தவில்லை.
மேலும், தன்வர்த்தினியின் பெற்றோர் ரவீந்தரன், கல்பனா ஆகிய இருவரும், இந்த மோசடிக்கு துணை போய் உள்ளனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மறைத்தும், அழித்தும் வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களால் என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement