முதல்வர் ஸ்டாலின் படம் சாலையில் வீச்சு கெங்கவல்லி தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்களுடன் மறியலில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகி, முதல்வர் ஸ்டாலின் படத்தை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே சுவேத நதியில் இருந்து இலுப்பை தோப்பு, கெங்கவல்லி நகர் வழியே நடுவலுார் ஏரிக்கு ஓடை கரை மீது, 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததால், மூன்று மாதங்களுக்கு முன் ஓடையை மேம்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், அப்பணியை மேற்கொள்ள விவசாயிகள், இரு நாட்களுக்கு முன், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் நாகலட்சுமி உத்தரவிட்டார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு, 'பொக்லைன்' வாகனத்துடன் நீர்வளத்துறை, வருவாய்த்துறையினர், கெங்கவல்லி போலீசாருடன் சென்று, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தி.மு.க., பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள், தி.மு.க., உறுப்பினர் அட்டைகள், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரது உருவப் படங்களை சாலையில் வீசி, கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்காரம் உட்பட 22 பேர் மீது, அரசு பணியை தடுத்தல், முதல்வர் படத்தை அவமரியாதை செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement