அரசு ஆஸ்பத்திரியில் கண்புரை ஆப்பரேஷன் செய்த பெண்ணுக்கு பார்வை போன பரிதாபம்

துாத்துக்குடி:அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மனைவி மாரியம்மாள், 57; கூலித்தொழிலாளி. கண் பிரச்னை காரணமாக அவர், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
கண்புரை இருப்பதாக கூறிய டாக்டர் சரவண வித்யா, ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து, ஜூலை 22ல் ஒரு கண்ணிலும், 24ம் தேதி மறு கண்ணிலும் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மறுநாள் மாரியம்மாளை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்த பின், இரு கண்களிலும் முற்றிலுமாக பார்வை போனதை உணர்ந்த மாரியம்மாள், 28ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சென்று கூறியுள்ளார். பரிசோதித்த டாக்டர் சரவண வித்யா, ஐந்து நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி, உள்நோயாளி பிரிவில் அனுமதித்து உள்ளார்.
திடீரென அவரை, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரை கூறி, 'அங்கு சென்று சிகிச்சை பெறுங்கள்; முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என, அங்குள்ள டாக்டர்கள் கூறியதால் மாரியம்மாள், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாரியம்மாள் மகள் மகேஸ்வரி கூறியதாவது: கண் கருவிழி பகுதியில் சில பிரச்னை இருப்பதால், அதை சரி செய்வதற்கான நவீன இயந்திரங்கள் தனியார் மருத்துவமனையில் தான் உள்ளன என டாக்டர்கள் கூறினர். உடனடியாக அங்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகள், அதற்கான செலவுகள் அனைத்தையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என கூறினர்.
இரு கண்களிலும் பார்வையை இழந்து என் தாய் தவித்து வருகிறார். ஆனால், டாக்டர்கள் அலட்சியமாக, தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். எங்களை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மாரியம்மாள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










