பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை; குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

7


பெங்களூரூ: பெங்களூருவில் ரூ.5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரகெரே பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் நிஷ்சித். இவர் கடந்த 30ம் தேதி டியூசனில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அச்சுதா, ஹூலிமாவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை பன்னீர்ஹட்டா - கோட்டிகெர் சாலையில் எரிந்த நிலையில், சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடலைக் கைப்பற்றிய போலீசார், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். சிறுவனின் வீட்டில் பகுதிநேர ஓட்டுநராக பணியாற்றி வந்த குருமூர்த்தி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தான் இந்த செயலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களை பிடிக்கச் சென்ற போது, தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, இருவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், காலில் காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement