ரிதன்யா பிரேத பரிசோதனை அறிக்கை: ஐகோர்ட் அதிருப்தி
சென்னை:'திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், காவல் துறை தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கை, திருப்தி அளிக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா. இவருக்கும், ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும், கடந்த ஏப்., 11ல் திருமணம் நடந்தது.
திருமணமான இரண்டரை மாதத்தில், ரிதன்யா, ஜூன் 28ல் விஷம் குடித்து இறந்தார். இந்த தற்கொலை வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மூவரும் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ரிதன்யாவின் தந்தை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'பொருளாதாரத்தில் இரு வீட்டாரும் சம அளவில் இருப்பதால், வரதட்சணை கேட்டு கொடுமை செய்யவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்' என்று வாதிடப்பட்டது.
ரிதன்யா தந்தை தரப்பில், 'வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைப்பர். நன்கு படித்த பெண்ணான ரிதன்யா, தற்கொலைக்கு துாண்டப்பட்டு உள்ளார்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, 'அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை.
'ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே; ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்னவானது; அந்த ஆடியோ அவரது மொபைல் போனில் தான் பதிவு செய்யப்பட்டதா' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், 'ரிதன்யாவின் மொபைல் போனில் தான், அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிதன்யா, கவின் ஆகியோரின் மொபைல் போன்கள், தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
'அதன் அறிக்கை, 10 நாட்களுக்குள் கிடைக்கும். சமூக வலைதள கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. ரிதன்யாவுடன் படித்தவர்களிடமும், உறவினர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது' என்றார்.
இதையடுத்து, ரிதன்யாவின் முழுமையான உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
'இதற்கிடையில், ரிதன்யா வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்' என, அவரது தந்தை தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் மனு அளித்தார்.
மேலும்
-
நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்
-
முதல்வர் உடல்நலன் விசாரித்ததில் அரசியல் இல்லை: ராமதாஸ்
-
சென்னையில் இருந்து குவைத் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு
-
நிமிஷா பிரியாவின் தண்டனை இன்னும் ரத்தாகவில்லை: காப்பாற்ற அனைத்து முயற்சியும் மேற்கொள்வதாக அரசு அறிவிப்பு
-
புதிய திட்டங்களுக்கு முதல்வர் பெயர் பயன்படுத்த தடை விதித்தது ஐகோர்ட்
-
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்