சிதம்பரம் கனகசபை மண்டபத்தில் தரிசனம் : அதிக பக்தர்களுக்கு அனுமதி கிடைக்கிறதா? ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

1

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்படுகின்றனரா என, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, ஹிந்து அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து, தமிழக அரசு, 2022 மே, 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, ஆறு கால பூஜை நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் கனகசபை மீது பக்தர்களை எவ்வாறு அனுமதிப்பது; எந்த நேரத்தில் அனுமதிப்பது தொடர்பாக, ஒரு திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகினர்.

'கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து, பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, மார்ச் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி தரிசனம் செய்து வருகின்றனர்' என, அவர்கள் தெரிவித்தனர்.

ஹிந்து அறநிலைய துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''பொது தீட்சிதர்கள் தரப்பு செய்துள்ள ஏற்பாடு அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து, பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய, அதிகாரிகள் குழுவை, ஹிந்து அறநிலைய துறை கமிஷனர் நியமிக்க வேண்டும்.

இந்த குழுவினர், வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என, மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா; அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனரா அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கின்றனரா என, புகைப்பட ஆதாரங்களுடன், வரும், 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Advertisement