அடுத்த ஆண்டு மீண்டும் சினிமாவுக்கு விஜய் சென்று விடுவார்: சேகர்பாபு

4

சென்னை: “அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின், நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க போய் விடுவார்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

கூட்டணி கட்சிகளை நம்பியே, தேர்தலை தி.மு.க., சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறுகிறார்.

நாங்கள் யாரையாவது அழைக்கிறோமா அல்லது அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளை விமர்சிக்கிறோமா? ஆனால், பழனிசாமி மைக்கை பிடித்தாலே, கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கிறார்; வி.சி.,க்களை அழைக்கிறார்.

'புலிக்கு பயந்தவன், தன்னை சுற்றி நின்று கொள்ளுங்கள், காப்பாற்றுகிறேன்' என கூறுவது போல், பழனிசாமியின் பேச்சு இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சிகள் நம்புகின்றன.

எனவே, 2026ல் மீண்டும் கிரீடத்தை சூட்ட மக்கள் தயாராக இருக்கின்றனர். வரும் 2026ல் மாற்றம் வரும் என விஜய் கூறுகிறார்.

நிச்சயமாக, விஜய்க்கு மாற்றம் வரும். 2026க்கு பின், 'நான் சினிமாவிற்கு செல்கிறேன்' என அறிவித்து மாற்றத்தை ஏற்படுத்துவார்.

அவர், எவ்வளவு வித்தை காட்டினாலும் ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் பக்கம் உள்ளது.

பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், சென்னையில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மூன்று மாதங்களில் திறக்கப்படும். முடிச்சூர் பேருந்து நிலைய வழக்கு நிலுவையில் உள்ளது.

விரைவில் முடிவு கிடைக்கும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றே அந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இப்போது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கின்றனர். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிக்காக, 20 கோடி ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கி உள்ளது. செப்டம்பரில், அது செயல்படத் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement