ரூ. 1 கோடி கேட்டு இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்; த.வா.க., நிர்வாகி கைது: புதுச்சேரியில் பரபரப்பு

1

புதுச்சேரி: போலீஸ் எஸ்.பி., மீதான வழக்கை வாபஸ் பெற, ரூ.1 கோடி பணம் கேட்டு இன்ஸ்பெக்டரை மிரட்டிய த.வா.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி போக்குவரத்து பிரிவு எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, பாலியல் வழக்கில் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.

இந்த வழக்கை வாபஸ் பெற, த.வா.க., புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர், எஸ்.பி., செல்வத்திடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், நேற்று காலை ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை சந்தித்த த.வா.க., சமூக ஊடகவியல் பொறுப்பாளர் பாபு, தனது கட்சி மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் அனுப்பியதாகவும், எஸ்.பி., மீதான புகாரை முடித்து வைக்க, அவரிடம் பேசி பணத்தை வாங்கி கொடுக்குமாறு மிரட்டினார்.

அப்போது, நாங்கள் ஏற்கனவே எஸ்.பி.,யிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு பேசிவிட்டோம். அவர் ரூ.60 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், இதுவரை பணத்தை தராமல் காலம் கடத்துகிறார்.

நீங்கள் பேசி பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும். உங்களுக்கு பிரச்னை வராமல் பார்த்து கொள்கிறோம்.

கலால் துறை, பாகூர் கொம்யூன் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிளையும், சில ரெஸ்டோ பார் நிர்வாகிகளை மிரட்டியுள்ளோம், தனியார் மருத்துவமனையில் இறந்தவரின் உடலை ரோட்டில் போட்டு போராட்டம் நடத்துவோம் என, மிரட்டி ரூ. 30 லட்சம் பறித்துள்ளோம் என, கூறியுள்ளார்.

கேட்ட பணத்தை நீங்கள் வாங்கி கொடுத்தால், எஸ்.பி., பிரச்னையை சுமூகமாக முடித்து தருவதாக கூறி மிரட்டினார்.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் ராஜன், த.வா.க., சமூக ஊடக பொறுப்பாளர் பாபு, த.வா.க., புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்தார். ஸ்ரீதரை தேடி வருகின்றனர்.

@block_B@

போலீஸ் ஸ்டேஷன் மூடல்

இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை, த.வா.க., நிர்வாகி பாபு பணம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து, உடன் பாபுவை போலீசார் பிடித்து விசாரிக்க துவங்கினர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ஸ்டேஷன் முன் திரண்டனர். இதனால், பாதுகாப்பு கருதி பகல் 12:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. ஸ்டேஷன் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். பிடிபட்ட பாபுவிடம், எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.block_B

Advertisement