கொலை செய்யப்பட்ட தமிழ் சினிமா ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது

71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. அப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் இந்த விருதைப் பெறுகிறார்கள்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சரவணமருது சவுந்தரபாண்டி. அவர் தற்போது உயிருடன் இல்லை. 2023ல் தனது மனைவியுடன் சரவண மருது தகாத உறவில் இருந்ததாக கூறி சக்திவேல் என்பவர் தனது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவணமருதுவைக் கொலை செய்து அவரது உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்தனர். 2023 அக்டோபர் 14ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற சரவண மருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் 'லிட்டில் விங்ஸ்'. இயக்குனர் ராஜூ முருகன், திலானி ரபிந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் நவீன். இவர் ராஜூமுருகனின் உதவி இயக்குனராக இருந்தவர். கந்தர்வனின் 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் இது.
இந்த படத்தை ஒளிப்பதிவு செய்த சரவணமருதுவுக்கு நேற்று சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
மறைவுக்குப் பிறகு சரவணமருதுவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

