சதம் விளாசினார் ஜெய்ஸ்வால் * வலுவான நிலையில் இந்தியா

லண்டன்: ஓவல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதம் விளாச, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன.
இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 75/2 ரன் எடுத்து 52 ரன் முன்னிலை பெற்றது.
ஆகாஷ் அரைசதம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆகாஷ் தீப், 21 ரன்னில் கொடுத்த கேட்ச்சை கிராலே நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய ஆகாஷ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது, ஓவர்டன் வீசிய பவுன்சரில் அவுட்டானார் ஆகாஷ் (66).
ஜெய்ஸ்வால் சதம்
கேப்டன் சுப்மன் கில் (11) நிலைக்கவில்லை. சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஜெய்ஸ்வால், டெஸ்டில் 6வது சதம் அடித்தார். கருண் (17) ஏமாற்றினார். டங்க் பந்தில் ஜெய்ஸ்வால் (118) வெளியேறினார். அடுத்து வந்த ஜுரல் 34 ரன் எடுக்க, ஜடேஜா (53) அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் அசத்திய வாஷிங்டன் 46 பந்தில் 53 ரன் எடுத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்னில் ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்சில் 374 ரன் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கியது இங்கிலாந்து அணி. சிராஜ் பந்தில் கிராலே (14) போல்டானார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 50/1 ரன் எடுத்து, 324 ரன் பின்தங்கி இருந்தது. டக்கெட் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.

754 ரன்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் சுப்மன் கில். இவர் 5 டெஸ்டில் 754 ரன் (4 சதம், சராசரி 83.00) எடுத்தார். முன்னதாக 1990ல் இங்கிலாந்தின் கிரஹாம் கூச், 752 ரன் எடுத்திருந்தார்.
* டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் சுப்மன் கில் (754) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் கவாஸ்கர் உள்ளார். இவர், 1971ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 774 ரன் எடுத்துள்ளார்.
* ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த கேப்டன்களில் பிராட்மேனுக்கு (810, 1936-37, எதிர்-இங்கிலாந்து) அடுத்த இடம் பிடித்தார் சுப்மன் (754). இங்கிலாந்தின் கிரஹாம் கூச் (752, 1990, இந்தியா) 3வது இடம் பெற்றார்.

கருண் காயமா
நேற்று அட்கின்சன் வீசிய பந்து (44.2 வது ஓவர்), கருண் நாயரின் வலது கை ஆட்காட்டி விரல் நுனியில் பலமாக தாக்கியது. பின் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங்கை தொடர்ந்தார்.

ஆகாஷ் அபாரம்
டெஸ்ட் அரங்கில் அமித் மிஸ்ராவுக்கு அடுத்து, அரைசதம் அடித்த, முதல் இந்திய 'நைட் வாட்ச்மேன்' ஆனார் ஆகாஷ் (66 ரன்). முன்னதாக 2011ல் அமித் மிஸ்ரா (ஓவல், எதிர்-இங்கிலாந்து) 84 ரன் எடுத்திருந்தார்.

6 சதம்
டெஸ்ட் அரங்கில் 23 வயதுக்குள் அதிக சதம் அடித்த துவக்க வீரர் வரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், 2வது இடம் பிடித்தார். இதுவரை இவர் 6 சதம் (46 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (7 சதம், 50 இன்னிங்ஸ்) உள்ளார்.

18 முறை
கடந்த 2000க்குப் பின் ஒரு டெஸ்ட் தொடரில் (இங்கிலாந்து, 2025), இந்திய அணி வீரர்கள் தங்கள் 'பார்ட்னர்ஷிப்பில்', 18 முறை 100 அல்லது அதற்கும் மேல் ரன் சேர்த்து சாதித்தனர்.
முன்னதாக 2003-04ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில், 17 முறை 100 ரன்னுக்கும் மேல் இந்தியா எடுத்தது.

19 சதம்
இந்தியா (12 சதம்), இங்கிலாந்து (7) டெஸ்ட் தொடரில் மொத்தம் 19 சதம் அடிக்கப்பட்டன. அதிக சதம் அடிக்கப்பட்ட தொடர் வரிசையில் இது மூன்றாவது இடம் பிடித்தது. முன்னதாக 1955ல் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 21, 2003-04ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க தொடரில் 20 சதம் அடிக்கப்பட்டன.

மழை வருமா

லண்டனில் இன்று இரவு 8:30 மணிக்கு மழை வர 62 சதவீதம் வாய்ப்புள்ளதால், ஆட்டம் பாதிக்கப்படலாம்.

ஜடேஜா ஜோர்
ஒரு டெஸ்ட் தொடரில், பேட்டிங் ஆர்டரில் 6 அல்லது அதற்கு பின் களமிறங்கி அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார் ஜடேஜா. இங்கிலாந்து தொடரில் 516 ரன் எடுத்தார். இதற்கு முன் 2002ல் லட்சுமண் 474 ரன் (எதிர்-வெ.இண்டீஸ்) எடுத்திருந்தார்.

சேஸ் செய்ய முடியுமா
ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில், நான்காவது இன்னிங்சில் அதிகபட்சம் 263 ரன்னை (1902, எதிர்-ஆஸி.,) சேஸ் செய்து வென்றது இங்கிலாந்து. அடுத்து 1963ல் வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களை (எதிர்-இங்கிலாந்து) எடுத்து வெற்றி பெற்றது. இம்முறை இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் தான் வெல்ல முடியும்.

வந்தார் சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று ஓவல் டெஸ்ட் போட்டியை காண வந்தார். ஹர்ஷா போக்ளே உடன் சிறிது நேரம் வர்ணனையாளர் அறையில் அமர்ந்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, டெஸ்ட் கிரிக்கெட் தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என குறிப்பிட்டார்.

Advertisement