ஹிமாச்சல்லில் மழை தொடர்பான நிகழ்வுகளில் 179 பேர் பலி

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழை துவங்கிய பிறகு, அதுதொடர்பான நிகழ்வுகளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் 20ம் தேதி முதல் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களில் 101பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக சாலை விபத்துகளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.


மழை காரணமாக மண்டி, குல்லு மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பல இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொது சேவைகள் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 505 மூடப்பட்டு உள்ளது. இதனால், பல முக்கிய வழி்பபாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குடிநீர் அமைப்புகள், மின்சார கம்பங்கள், சாலை, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ.1,71,495 கோடியை தாண்டும். 88,800 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

பொதுச்சேவைகள் மற்றம் நிவாரண பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவற்றில்சிக்கல் நிலவுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வானிலை சரியாக இல்லாத காரணத்தினாலும் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement