உலக நீச்சல்: அமெரிக்கா ஆதிக்கம்

சிங்கப்பூர்: உலக நீச்சல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க நட்சத்திரங்கள் 9 தங்கம் உட்பட 29 பதக்கம் கைப்பற்றினர்.

சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 25.78 வினாடியில் கடந்த கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 4வது தங்கம், 5வது பதக்கம் ஆனது. ஏற்கனவே 400 மீ., 'பிரீஸ்டைல்', 200 மீ., 'பட்டர்பிளை', 'மெட்லே' பிரிவில் தங்கம் வென்றிருந்த இவர், 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். தவிர இவர், உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 13 பதக்கம் வென்றுள்ளார்.
மார்ச்சந்த் 'தங்கம்': ஆண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் அசத்திய பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (4 நிமிடம், 04.73 வினாடி) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இவர் வென்ற 2வது தங்கம் ஆனது. ஏற்கனவே 200 மீ., 'மெட்லே' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 7 தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ளார்.


இதன் தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் ஷோன் கங்குலி (4:30.40), ஒட்டுமொத்தமாக 28வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

அமெரிக்கா சாதனை: பெண்களுக்கான 4x100 மீ., 'மெட்லே ரிலே' பைனலில் அசத்திய ரீகன் ஸ்மித், கேட் டக்ளாஸ், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.34 வினாடியில் கடந்து தங்கம் வென்றது. தவிர, இலக்கை அதிவேகமாக கடந்து தனது சொந்த உலக சாதனையை முறிடித்தது. இதற்கு முன், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் ரீகன் ஸ்மித், லில்லி கிங், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி (3:49.63) சாதித்திருந்தது.


@quote@

முதலிடம்



நீச்சல் போட்டியில் 9 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என, 29 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த இரு இடங்களை ஆஸ்திரேலியா (8 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்), பிரான்ஸ் (4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம்) பிடித்தன.quote

Advertisement