கைக்கெட்டும் தூரத்தில் மின்சாதனங்கள் * அச்சத்தில் கிராம மக்கள்

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கைக்கெட்டும் தூரத்தில் மின்சாதனங்கள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கிராமமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், தெரு விளக்கிற்காகவும் ஆங்காங்கே மின் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர குளியல் தொட்டி, கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி ஆகியவற்றிற்காகவும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டாரை இயக்க சுவிட்ச் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. மழையிலும், வெயிலிலும் இந்த மின்சார ஸ்விட்ச்கள் இருப்பதால் சேதமடைந்து அந்தரத்தில் விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளன. போதிய பராமரிப்பும் செய்வதில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழுதடைந்த ஸ்விட்ச் பாக்சை கடந்துதான் சென்று வருகின்றனர். சிறுவர்கள் பலரும் குளிப்பதற்கு, கால்நடைகள் குடிப்பதற்கு மோட்டாரை இயக்குகின்றனர். மழை காலங்களில் இந்த மின்சாதனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் சுவிட்ச் பாக்ஸ்கள் அனைத்தும் ஈரமான இடங்களிலேயே உள்ளன. கடந்த சில நாட்களாக திருப்புவனம் வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை காலம் தொடங்குவதற்கு முன் விபத்து ஏற்படும் வகையில் உள்ள சுவிட்ச்களை சரி செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement