பாதிப்பு... : வைகை ஆற்றிற்குள் மணல் திருட்டால் பலமிழக்கும் பாலம், குடிநீர் திட்ட கிணறுகள்



திருப்புவனம்: திருப்புவனத்தில் பாலம், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் அருகே தொடர்ச்சியாக மணல் திருட்டு நடப்பதால் பாலத்தின் தாங்குதிறன் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள், பாலங்கள் ஆகியவை உள்ளன. கட்டுமான தேவைக்கு எம். சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மணல்கள் இருந்தாலும் ஆற்று மணல்தான் சென்ட்ரிங், தூண் போன்றவற்றிற்கு வலுவானதாக கருதப்படுகிறது. இதற்காக திருப்புவனம், புதூர், வடகரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் டூ வீலர்களில் மணல் திருடுகின்றனர். வைகை ஆற்றில் நாணல்கள், கருவேல மரங்களுக்கு நடுவில் பள்ளம் தோண்டி மணல் திருடுகின்றனர். பகலில் சாக்குப்பைகளில் மணல்களை அள்ளி நிரப்பி வைத்து விட்டு இரவு 10 மணி முதல் விடிய விடிய டூவீலர்களில் மணல் ஏற்றி சென்று கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர். வைகை ஆற்றங்கரைகளில் மறைவிடங்கள் உருவாக்கி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து விட்டு சரக்கு வேன்களில் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். வடகரை ஆண்கள் பள்ளி அருகே மணல் திருட்டு கும்பல் பாதை உருவாக்கி அதன் வழியாக மணல் கடத்தல் ஜரூராக நடைபெறுகிறது. மணல் கடத்தலுக்கு தெருவிளக்குகள் தடையாக இருப்பதால் அவற்றை சேதப்படுத்தி வருகின்றனர். வைகை ஆற்றுப்பாலத்தை ஒட்டியுள்ள நாணல் புதர்களுக்குள் மணல் அள்ளியதால் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகி உள்ளன. பாலத்தை ஒட்டி மணல் அள்ளப்படுவதால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது. பாக்யாநகர், சேதுபதிநகர், புதூர் உள்ளிட்ட வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கட்டுமான தேவைக்கு தலைச்சுமையாகவும், டூவீலர்களிலும் மணல் அள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

///

Advertisement